/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/hndtfhjnf.jpg)
ஐந்து மாதங்களில் 19 முறை தங்கம் கடத்தியதாக அமலாக்கப்பிரிவு விசாரணையில் ஸ்வப்னா சுரேஷ் வாக்குமூலம் அளித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரைப் பயன்படுத்தி தங்கம் கடத்திய வழக்கில் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர், சரித் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக 20-க்கும் மேற்பட்டோரிடம் அமலாக்கப்பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தங்கக் கடத்தல் வழக்கில் நான்காவது குற்றவாளியான சந்தீப் நாயர் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகதெரிவிக்கப்பட்டது. மேலும், ஸ்வப்னா கேரள அரசியல்வாதிகளுடனும் மூத்த அதிகாரிகளுடனும் நெருக்கமாகப் பழகியது தொடர்பான பல தகவல்கள் என்.ஐ.ஏ விசாரணையில் கண்டறியப்பட்டது.
இந்நிலையில், கடந்த நவம்பர் மாதத்திலிருந்து மொத்தம் 19 முறை தங்கக்கடத்தலில் ஈடுபட்டதாக ஸ்வப்ன சுரேஷ் அமலாக்கத்துறை விசாரணையில் தெரிவித்துள்ளார். ஸ்வப்னா சுரேஷ் மீது கருப்புப் பண தடுப்புச் சட்டம் மற்றும் வெளிநாட்டுப் பணப் பரிவர்த்தனை மேலாண்மைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விசாரணையில், விண்வெளி பூங்காவில் பணிக்குச் சேர்ந்த பின்னரே கடத்தலைத் தொடங்கியதாகவும், அதற்கு முன் ஐக்கிய அரபு அமீரகம் துணைத் தூதரகத்தில் பணிபுரிந்தபோது கடத்தலில் ஈடுபடவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், அவரும் அவரது கும்பலும் டிசம்பரில் மட்டும் 36 கிலோ தங்கத்தைக் கடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மொத்தமாக, திருவனந்தபுரம் விமான நிலையம் வழியாக நவம்பர் 2019 முதல் ஜூன் 2020 வரை சுமார் 19 முறை தங்கத்தைக் கடத்தியதாகவும், அதில் நவம்பர் மாதத்தில் நான்கு முறை, டிசம்பரில் 12 முறை, ஜனவரி, மார்ச் மற்றும் ஜூன் மாதங்களில் தலா ஒரு முறை சட்டவிரோதமாகத் தங்கம் கடத்தியதாகவும் விசாரணையில் ஸ்வப்னா சுரேஷ் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)