Skip to main content

'மம்தா தொடர்ந்த வழக்கை அங்கு விசாரிக்கக் கூடாது' - உச்ச நீதிமன்றத்தை நாடிய சுவேந்து அதிகாரி!

Published on 15/07/2021 | Edited on 15/07/2021

 

MAMATA BANERJEE

 

மேற்கு வங்கத்தில் மார்ச் - ஏப்ரலில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், திரிணாமூல் காங்கிரஸ் அறுதிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்தது. இந்தத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில், தனது கட்சியிலிருந்து பாஜகவிற்குத் தாவிய முன்னாள் அமைச்சர் சுவேந்து அதிகாரியை எதிர்த்து மம்தா போட்டியிட்டார்.

 

வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியான அன்று, முதலில் மம்தா வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சிறிது நேரத்தில் சுவேந்து அதிகாரி வென்றதாக அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்தல் முடிவினை எதிர்த்து வழக்கு தொடரப்போவதாக மம்தா, முடிவுகள் வெளியான அன்றே தெரிவித்திருந்தார். அதன்படியே கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை முதலில் கௌஷிக் சந்தா என்ற நீதிபதி விசாரிப்பதாக இருந்தது. ஆனால் கௌஷிக் சந்தாவிற்கு பாஜகவுடன் தொடர்பு இருப்பதால், அவர் இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார். இதனையடுத்து கௌஷிக் சந்தா இந்த வழக்கை விசாரிப்பதிலிருந்து விலகிக்கொண்டார்.

 

இதனையடுத்து ஷாம்பா சர்க்கார் என்ற நீதிபதிக்கு, இந்த தேர்தல் முடிவிற்கு எதிரான வழக்கை விசாரிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் நேற்று (14.07.2021) இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஷாம்பா சர்க்கார், இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்க சுவேந்து அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டார். மேலும், நந்திகிராம் தேர்தல் தொடர்பான ஆவணங்கள், தேர்தல் பேப்பர்கள், தேர்தலில் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள், தேர்தலின்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் உட்பட அனைத்தையும் பாதுகாக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதி ஷாம்பா சர்க்கார் உத்தரவு பிறப்பித்தார்.

 

இந்தநிலையில் சுவேந்து அதிகாரி, மம்தா பானர்ஜி தொடர்ந்த இந்த வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மேற்கு வங்கத்தில் நீதித்துறையின் மீது தாக்குதல் நடப்பதாக, மம்தா தொடர்ந்த வழக்கை முதலில் விசாரிக்க இருந்த நீதிபதி கௌஷிக் சந்தா கூறியதைச் சுட்டிக்காட்டி சுவேந்து அதிகாரி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“காங்கிரசிற்கு ஒரு வாக்குக்கூட கிடைக்காது” - மம்தா பானர்ஜி அதிரடி பேச்சு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Mamata Banerjee speech on Congress won't get a single vote in west bengal

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொண்டு நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க, திரிணாமுல் காங்கிரஸ், இடது சாரிகள் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரபடுத்தி வருகின்றன.

இதற்கிடையில், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ், 42 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. இது காங்கிரஸ் தரப்பினரிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும், தொகுதி பங்கீடு தொடர்பாக திரிணாமுல் காங்கிரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறிய காங்கிரஸ் கட்சிக்கும் மேலும் அதிருப்தி ஏற்படுத்தும் வகையில், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 42 வேட்பாளர்களை மம்தா பானர்ஜி அதிரடியாக அறிவித்தார்.

அந்த வகையில், 42 மக்களவைத் தொகுதிகள் கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில், ஏப்ரல் 19, 26 மற்றும் மே 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. மேலும், பகவான்கோலா மற்றும் பாராநகர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் மே 7 மற்றும் ஜூன் 1 அன்று இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி மேற்கு வங்கத்தில் தேர்தல் நடைபெற்றது. வரும் 26ஆம் தேதி நடைபெறும் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. 

அதன்படி, மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நேற்று (24-04-24) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், “மேற்கு வங்கத்தில் 26,000 ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆசிரியர்களிடமிருந்து அல்ல, எந்த அரசாங்க ஊழியரிடமிருந்தும் பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸுக்கு ஒரு வாக்கு கூட கிடைக்காது. உச்சநீதிமன்றத்தில் இருந்து நீதி கிடைக்கும் என இன்னும் நான் நம்புகிறேன்.

பாஜக உயர் நீதிமன்றத்தை விலைக்கு வாங்கியுள்ளனர். சி.பி.ஐயை விலைக்கு வாங்கியுள்ளனர். என்.ஐ.ஏ.வை வாங்கியுள்ளனர். பி.எஸ்.எப்-ஐ விலைக்கு வாங்கியுள்ளனர்.  தூர்தர்ஷனின் நிறத்தை காவி நிறமாக்கி விட்டார்கள். அதில், பாஜக மற்றும் மோடியைப் பற்றி மட்டுமே பேசுவார்கள். அதைப் பார்க்காதீர்கள். புறக்கணிக்க வேண்டும்” என்று கூறினார். 

Next Story

மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Collectors appeared in the office of the ed

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்வதாகவும், மணல் ஒப்பந்த குவாரிகள் மூலம் வரும் வருமானத்தை சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான ஆவணங்களுடன் நேரில் அமலாக்கத்துறை முன்பு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பிலும், மாவட்ட ஆட்சியர்கள் சார்பிலும் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடவடிக்கை பாதிக்கும் என்பதால் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக கால அவகாசம் வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தால் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். மணல் கொள்ளை வழக்கில் அமலாக்கத்துறை முன்பு மாவட்ட ஆட்சியர்கள் ஏப்ரல் 25 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக வழங்கப்பட்ட சம்மனுக்கு தடை எதுவும் வழங்க முடியாது” எனத் தெரிவித்திருந்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை மே 6 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் மணல் முறைகேடு வழக்கு தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களும் இன்று (25.04.2024) அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக உள்ளனர். முன்னதாக மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருந்ததும், இந்த முறைகேட்டில் மாவட்ட ஆட்சியர்களுக்கும் தொடர்பு உள்ளது என அமலாக்கத்துறை குற்றம் சாட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.