இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 29ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவந்தது. இந்நிலையில், இந்தக் கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே 12 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாளன்று அவையின் மாண்பைக் குலைக்கும் விதமாக நடந்துகொண்டதாகக் கூறி அந்த 12 உறுப்பினர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள், இடைநீக்கத்தைத் திரும்பப் பெற வேண்டும்என கோரிக்கை விடுத்தனர். ஆனால் மாநிலங்களவை சபாநாயகரும்மத்திய அரசும், இடைநீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் தங்கள் செயலுக்கு மன்னிப்பு கேட்டால்மட்டுமே, அவர்களது இடைநீக்கம் திரும்பப் பெறப்படும் என அறிவித்தனர்.
இருப்பினும் மன்னிப்பு கேட்க மறுத்த இடைநீக்கம் செய்யப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள், தொடர்ந்து நாடாளுமன்றத்தில் உள்ள காந்தி சிலை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். அவர்களுக்கு ஆதரவாக ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்களும் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். இதற்கிடையே நேற்று (21.12.2021), மோசமாக நடந்துகொண்டதாகக் கூறி மேலும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்தச் சூழலில், இன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இதன்பின்னர் குளிர்கால கூட்டத்தொடரில் இடைநீக்கம் செய்யப்பட்ட 13 மாநிலங்களவை உறுப்பினர்களும், நாடாளுமன்றத்தில் உள்ள காந்தி சிலை முன்பு, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகவுரையைப் படித்து மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.