பாஜக வின் மூத்த தலைவர்களின் ஒருவரும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான சுஷ்மா ஸ்வராஜ் நேற்று இரவு காலமானார்.
டெல்லியின் முதல் பெண் முதல்வர், இந்திரா காந்திக்கு அடுத்து இரண்டாவது பெண் வெளியுறவுத்துறை அமைச்சர், பாஜகவின் முதல் மக்களவை பெண் எதிர்க்கட்சி தலைவர் என பல்வேறு பெருமைகளுக்கு சொந்தக்காரர் சுஷ்மா ஸ்வராஜ். பாஜகவின் மூத்த தலைவர் என்பதை கடந்து மற்ற கட்சிகளின் தலைவர்களாலும், பொதுமக்களால் அதிகம் நேசிக்கப்பட்ட ஒரு அரசியல்வாதி இவர்.
2014 மக்களவை தேர்தலில் பாஜக வெற்றிபெற்று ஆட்சியமைத்த போது வெளியுறவுத்துறை அமைச்சராக பதவியேற்றார். அவரது இந்த பதவிக்காலத்தில், சர்வதேச அரங்கில் இந்தியாவின் பிரதிநிதியாக செயல்பட்டதை கடந்து, வெளிநாடுகளில் சிக்கித்தவித்த பல அப்பாவி இந்தியர்களுக்கு மீண்டும் நாடு திரும்புவதற்கான வழிவகைகளை செய்தார். இரண்டு நாடுகளுக்கு இடையேயான உறவு என்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல், ஒவ்வொரு குடிமகனின் கோரிக்கைக்கும், புகாருக்கும் உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொண்டார்.
யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் தொடர்புகொள்ளக்கூடிய ஒரு தலைவராகவே பொதுமக்கள் மத்தியில் அவர் பார்க்கப்பட்டார். பொதுமக்களில் யாருக்காவது ஏதேனும் பிரச்சனை என்றால், மனு எழுதி அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் பார்க்க மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டிய இன்றைய சூழலில், வெறும் ஒரு ட்வீட் செய்தலே அதனை பார்த்து விசாரணை மேற்கொண்டு உடனடி நடவடிக்கைகளை எடுத்தார் சுஷ்மா. நமது ட்வீட்டை சுஷ்மா பார்த்துவிட்டால் போதும் நமது வாழ்க்கை கண்டிப்பாக மாறிவிடும் என பல வெளிநாடுவாழ் இந்தியர்கள் நினைக்க தொடங்கியதே அவரின் வெற்றி என கூறலாம்.
இதன்மூலம் மக்களுக்கு மிகவும் நெருக்கமான மற்றும் பிடித்த அரசியல்வாதியாக மாறிப்போனார் சுஷ்மா. சொந்த காட்சியிலேயே ஆதரவு திரட்ட பலர் கஷ்டப்படும் நிலையில், எதிர்கட்சியினரின் ஆதரவையும், அன்பையும், மதிப்பையும் சம்பாதித்த சுஷ்மாவின் இழப்பு இன்று பலரையும் கண்ணீர் விட வைத்துள்ளது.