/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/modi_83.jpg)
ரஃபேல் ஊழல் தொடர்பாக சாத்தியமற்ற பொய்களை சாத்தியமாக்குகிறார் மோடி என்று காங்கிரஸ் கடுமையாக குற்றம்சாட்டி இருக்கிறது.
ரஃபேல் விமான பேரம் தொடர்பான ஆவணங்களை தி ஹிண்டு நாளிதழ் வெளியிட்டு பரபரப்பை உருவாக்கியது. இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் ரஃபேல் தொடர்பான விசாரணையில் மத்திய அரசு வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் பேசும்போது, பாதுகாப்புத்துறை அமைச்சகத்திலிருந்து ரஃபேல் தொடர்பான ஆவணங்கள் திருடுபோய்விட்டது என்று கூறினார். இது தொடர்பாக எப்ஐஆர் போடவில்லை என்றும் விசாரணை நடைபெறுகிறது என்றும் கூறியிருந்தார். திருடுபோன ஆவணங்களை வெளியிடுவது குற்றம் என்றும் வெளியிட்டவர்கள் மீது ரகசிய காப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மிரட்டியிருந்தார்.
ஆனால், அவர் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்த விவரங்கள் நாடுமுழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராணுவம் தொடர்பான ஆவணங்களையே பாதுகாக்க முடியாத மோடி அரசு எப்படி நாட்டை பாதுகாக்கும் என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கின. ஊடகங்களும் கருத்து சுதந்திரத்தை நசுக்க மோடி அரசு முயற்சிப்பதாக கண்டனம் தெரிவித்தன. இது மத்திய அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் ரஃபேல் பேரம் தொடர்பான ஆவணங்கள் திருடு போனதாக கூறவில்லை என்றும், அந்த ஆவணங்களின் நகல்களே திருடப்பட்டன என்றும் கூறியதாக மத்திய அரசு வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் கூறினார். அவர் இப்படிக் கூறியதும், அமித் ஷா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, மத்திய அரசு வழக்கறிஞர் கூறியதை தவறாக புரிந்துகொண்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் ரஃபேல் பேரம் குறித்து மோடிக்கு எதிராக 12 ஆவது பொய்யை கூறியிருக்கிறார் என்று கூறினார்.
மத்திய அரசு வழக்கறிஞரின் இந்த திடீர் பல்டி குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா ட்விட்டரில் கருத்து தெரிவித்தார். அதில், “ஒரு பொய்யை மறைக்க 100 பொய்கள் சொல்வது போல, நேற்று உச்சநீதிமன்றத்தில் ரஃபேல் ஆவணங்கள் திருடுபோனதாக கூறினார். இன்று நகல்கள் திருடு போனதாக கூறுகிறார். நாளைக்கு என்ன பொய் சொல்லப் போகிறீர்கள்? உங்களால் சாத்தியமற்ற பொய்களும் சாத்தியமாகின்றன” என்று கிண்டல் செய்திருக்கிறார்.
சமீபநாட்களாக, மத்திய அரசின் சாதனைகள் என்று பல பக்கங்கள் தொடர் விளம்பரங்களாக பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியிடப்படுகின்றன. அந்த விளம்பரங்களில் சாத்தியமில்லாதவற்றை சாத்தியப்படுத்தியதாக மோடி கூறுவதைப் போல விளம்பரம் செய்யப்படுகின்றன. அதையே சுர்ஜித்வாலா கிண்டலாக குறிப்பிட்டிருக்கிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)