Skip to main content

சிரித்த முகம் வேண்டும்; நூதன முயற்சியால் தொழிலதிபர் உயிரிழப்பு

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
 Surgery for smiling face; businessman dies

ஹைதராபாத்தை சேர்ந்த 28 வயது தொழிலதிபர் சிரித்த முகம் வேண்டும் என்பதற்காக அறுவை சிகிச்சை செய்துகொள்ள முயன்றபோது சிகிச்சையின் போதே உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஹைதராபாத்தை சேர்ந்த 28 வயது தொழிலதிபர் லட்சுமி நாராயணன். அண்மையில் லட்சுமி நாராயணனுக்கு திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தனக்கு சிரித்த முகம் இருக்க வேண்டும் என்பதற்காக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என முடிவெடுத்து ஹைதராபாத் ஜூபிலி பகுதியில் உள்ள எப்.எம்.எஸ் இன்டர்நெஷனல் டெண்டல் கிளினிக்கில் கடந்த 16 ஆம் தேதி அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.

தான் அறுவை சிகிச்சை செய்யப்போவதை வீட்டில் யாருக்கும் லட்சுமி நாராயணன் சொல்லவில்லை என்று கூறப்படுகிறது. கிளினிக்கிற்கு தனியாக சென்ற அவருக்கு அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடு செய்யப்பட்டது. தொடர்ந்து அறுவை சிகிச்சை நடந்துகொண்டிருக்கும்போதே அவர் உயிரிழந்தார். இதற்கிடையில் லட்சுமி நாராயணின் தந்தை ராமுலு அவருக்கு போன் செய்துள்ளார். அப்பொழுது அழைப்பை எடுத்த கிளினிக் ஊழியர்கள் அவர் இறந்துவிட்டதை தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த தந்தை ராமுலு  அலறித்துடித்துள்ளார்.

தொடர்ந்து அதிகஅளவிலான மயக்க மருந்து கொடுத்ததால் தன் மகன் உயிரிழந்ததாக போலீசில் லட்சுமி நாராயணனின் தந்தை புகார் அளித்துள்ளார். அவரின் புகாரில் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

மசூதி நோக்கி வில் அம்பு; சர்ச்சையில் சிக்கிய பா.ஜ.க வேட்பாளர்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Controversial BJP candidate and Bow arrow towards the mosque in telangana

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில், மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் நான்காம் கட்டமாக மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி கட்சி, பா.ஜ.க ஆகிய கட்சிகள் களம் இறங்குகிறது. இங்கு பெரு நகரமாக பார்க்கப்படும் ஹைதராபாத் மக்களவைத் தொகுதி, கடந்த 1984ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஏஐஎம்ஐஎம் கட்சி வசம் உள்ளது. தனது தந்தைக்கு பிறகு, ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவராக இருக்கும் அசாதுதீன் ஒவைசி ஹைதராபாத் மக்களவை தொகுதியில் எம்.பியாக உள்ளார். இவரை எதிர்த்து பா.ஜ.க சார்பில், உள்ளூர் பிரபலமான மாதவி லதா என்ற பெண் மருத்துவர் ஹைதராபாத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், நேற்று (17-04-24) நாடு முழுவதும் ராம நவமி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு அனைத்து மாநிலங்களில் உள்ள ராமர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகளும், அதனையொட்டி ஊர்வலங்களும் நடத்தப்பட்டன. அந்த வகையில், தெலுங்கானா பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜா சிங் தலைமையில் ராம நவமி ஷோபா யாத்திரை, காவல்துறையின் தடையை மீறி நடத்தப்பட்டது. அந்த விழாவில் ஹைதராபாத் பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா பங்கேற்றார். அது தொடர்பாக ஊர்வலம் ஒன்றில் மாதவி லதா வலம் வந்த போது, அவரது செயல் தற்போது சர்ச்சையாகியுள்ளது.

இது தொடர்பான வீடியோவில், மாதவி லதா தனது கைகளில் வில், அம்பு பிடித்திருப்பது போல் பாவனை செய்து தொலைவிலிருக்கும் இலக்கை நோக்கி எய்கிறார். அதனைப் பதிவு செய்யும் கேமரா, அம்பின் திசை மற்றும் இலக்காக அருகில் இருக்கும் மசூதி ஒன்றை சுட்டிக்காட்டுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானதை தொடர்ந்து, பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதாவுக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இதனையடுத்து, இந்த வைரல் வீடியோ குறித்து விளக்கமளித்த மாதவி லதா, இந்தச் சம்பவத்திற்கு மன்னிப்பு கூறியுள்ளார். இது குறித்து பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா தனது ட்விட்டர் (எக்ஸ்) தள பக்கத்தில் கூறியிருப்பதாவது, “என்னுடைய வீடியோ ஒன்று ஊடகங்களில் பரவி எதிர்மறையை ஏற்படுத்துவது எனது கவனத்திற்கு வந்துள்ளது. இது முழுமையடையாத காணொளி என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். மேலும் இதுபோன்ற காணொளியால் யாருடைய உணர்வும் புண்பட்டிருந்தால், எல்லா நபர்களையும் மதிப்பதால் மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்

Next Story

கொதிக்கும் சாம்பாரில் விழுந்தும் தப்பிய சிறுவன்; உயிரைப் பறித்த அறுவை சிகிச்சை 

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
The boy who fell into the boiling sambar and escaped; Surgery that took life

கொதிக்கும் சாம்பாரில் தவறுதலாக விழுந்த சிறுவன் தழும்பு நீக்க சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை தாம்பரத்தை அடுத்துள்ள பெருங்களத்தூர் பகுதியில் வசித்து வருபவர் செல்வம். இவரது மகன் மதன்(3). செல்வம் வீட்டுக்கு அருகிலேயே உணவகம் ஒன்றை நடத்தி வந்தார். இந்தநிலையில் கடந்த ஜனவரி 3 ஆம் தேதி கடையில் விளையாடிக் கொண்டிருந்த மகன் மதன், ஹோட்டலில் கொதித்துக் கொண்டிருந்த சாம்பாரில் தவறுதலாக விழுந்துள்ளார். அலறித்துடித்த மதனின் குரலைக் கேட்ட கடை ஊழியர்கள் உடனடியாக மதனை காப்பாற்றினர். இதில் சிறுவனின் வலது கை வெந்து போனது. உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட மதன் மருத்துவச் சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்தான்.

தொடர்ந்து மதனின் கை பகுதியிலிருந்த தீக்காய தழும்புகளை சரி செய்ய வேண்டும் என பல்லாவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுவனை பெற்றோர் அனுமதித்துள்ளனர். தீக்காய தழும்பு நீக்குவதற்கான அறுவை சிகிச்சை செய்வதற்கு 35 ஆயிரம் ரூபாய் செலவாகும் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும், இதை ஒப்புக் கொண்ட பெற்றோர்  சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், திடீரென சிகிச்சையின்போது சிறுவன் மதன் இறந்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் கதறி அழுதனர். பெற்றோர் தரப்பில் சங்கர் நகர் காவல் நிலையத்தில் மகனின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. முறையான சிகிச்சை அளிக்காததால் மகன் இறந்து விட்டதாக பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக அங்கு சென்ற போலீசார் இறந்த சிறுவனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கொதிக்கும் சாம்பாரில் விழுந்து பிழைத்த சிறுவன் அதனால் ஏற்பட்ட தீக்காய தழும்புகளை சரி செய்ய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.