Supreme Court warns to take immediate decision on Manipur issue

Advertisment

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பைரன் சிங் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் பெரும்பான்மை சமூகமாக உள்ள மைத்தேயி சமூகத்தினர் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இதையடுத்து மைத்தேயி சமூகத்தைப் பழங்குடியினப் பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கடந்த மே 3 ஆம் தேதி மணிப்பூரில் பாதயாத்திரை மேற்கொண்ட போது, இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்ததில் இருதரப்புக்கும் இடையேயான கலவரமாக மாறியது. இதனால் இரண்டு சமூகங்களைச் சேர்ந்த மக்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வரும் இந்த கலவரத்தால் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதனைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் மணிப்பூர் மாநில ஆளுநர் அனுசுயா உய்கே, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்திருந்தார். இதனிடையே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மணிப்பூர் சென்று இரு சமூகத்தினரையும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். அதனைத் தொடர்ந்து ராகுல் காந்தி பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இருப்பினும் பல்வேறு இடங்களில் தொடர்ந்து வன்முறை, கலவரங்கள் ஏற்பட்டுப் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால் பிரதமர் மோடி மணிப்பூர் பிரச்சனை குறித்து மௌனமாக இருந்து வந்தார். மணிப்பூரே பற்றி எரியும் போது பிரதமரின் மௌனம் காப்பது கண்டிக்கத்தக்கது என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தனர்.

Advertisment

இந்நிலையில் மணிப்பூரில் கடந்த மே மாதம் 4 ஆம் தேதி குக்கி பழங்குடியின பெண்கள் இருவரை மைத்தேயி இன இளைஞர் கும்பல் ஒன்று ஆடைகளை களைந்து இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து உள்ளனர். இது சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. பெண்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை ஒரு போதும் மன்னிக்க மாட்டோம் என 78 நாட்கள் கழித்து பிரதமர் மோடி மௌனம் களைத்தார்.

இந்த நிலையில் மணிப்பூர் விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கத் தவறினால் உச்சநீதிமன்றம் இவ்விவகாரத்தைக் கையில் எடுக்க நேரிடும். மணிப்பூர் கலவரத்தில் 2 பெண்கள் ஆடைகளைக் களைந்து இழுத்துச் செல்லப்படும் வீடியோக்கள் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூரில் நடந்த இந்த கொடூரம் ஏற்றுக்கொள்ள முடியாதது” என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார். முன்பு மணிப்பூர் கலவரம் தொடர்பான வழக்கில் இது சட்ட ஒழுங்கு பிரச்சனை மத்திய மாநில அரசுதான் தலையிட வேண்டும் என உச்சநீதிமன்ற கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.