Advertisment

அதானி குழும வழக்கு; ‘சிறப்பு புலனாய்வு குழு தேவையில்லை’ - உச்சநீதிமன்றம் தீர்ப்பு

 Supreme Court Verdict No need for Special Investigation Team on Adani Group case

அமெரிக்காவைச் சேர்ந்த நிதி ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம், அதானி குழுமம் முறைகேடுகளில் ஈடுபடுவதாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் அனைத்தும் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதானி நிறுவனங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்தும் அதானி குழுமத்தின் முன்னாள் உயரதிகாரிகள் சிலரை நேர்காணல் செய்தும் திரட்டியது என ஹிண்டன்பெர்க் நிறுவனம் தெரிவித்திருந்தது.

Advertisment

மேலும் அந்த ஆய்வறிக்கையில் பங்கு முறைகேடு, பங்கின் மதிப்பினை உயர்த்திக் காட்டி அதிக கடன் பெறுதல், போலி நிறுவனங்கள் துவங்கி வரி ஏய்ப்பு செய்தது போன்ற குற்றச் செயல்களில் அதானி குழுமம் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் அதானி குழுமத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. இதனைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் எஃப்.பி.ஓ பங்குகள் விற்பனை செய்யும் திட்டத்தை ரத்து செய்வதாக அதானி குழுமம் அறிவித்தது. இழப்புகளில் இருந்து முதலீட்டாளர்களைக் காக்கவே பங்கு விற்பனை ரத்து செய்யப்பட்டது என்றும், முதலீட்டாளர்களுக்கு விற்பனைத் தொகையைத் திரும்பச் செலுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்பது கோரிக்கையாக வைக்கப்பட்டிருந்தது.

Advertisment

இதற்கிடையே, இந்த வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம், முன்னாள் நீதிபதி ஏ.எம்.சாப்ரே தலைமையில் 6 பேர் கொண்ட விசாரணைக் குழு ஒன்றை அமைத்தது. இந்த குழு, 173 பக்கங்கள் கொண்ட அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், "பங்குச் சந்தை ஒழுங்குமுறை கட்டுப்பாட்டாளரான இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (SEBI) தரவுகளின் அடிப்படையில் அதானி குழுமத்தின் எந்த ஒரு நிறுவனமும் பங்கு விலை அதிகரிப்பு போன்ற முறைகேட்டில் ஈடுபட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை. மேலும் பங்குகள் விலை திடீரென அதிகரித்ததை மட்டும் வைத்துக்கொண்டு முறைகேடுகள் நடந்ததா என்ற முடிவுக்கு வருவது சாத்தியமில்லை.

கடந்த 2020 ஆம் ஆண்டு அதானி குழுமத்தில் 13 வெளிநாட்டு முதலீடுகள் குறித்து செபிக்கு பல்வேறு சந்தேகங்கள் இருந்துள்ளன. இது தொடர்பாக இந்திய மற்றும் வெளிநாட்டு அமைப்புகளுடன் இணைந்து விசாரணை நடத்தி உள்ளது. ஆனால், இதில் போதுமான ஆதாரங்கள் திரட்டப்படவில்லை. அதே சமயம் அதானி குழுமம் இந்திய ஒழுங்குமுறை சட்டங்களுக்கு இணங்குவதாகவும் செபி தெரிவித்துள்ளது" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஹிண்டர்பர்க் அறிக்கை தொடர்பாக நிபுணர் குழு அளித்துள்ள பரிந்துரைகள் அடிப்படையில் 3 மாதத்தில் செபி விசாரணையை முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. இது தொடர்பாக இன்று (03-01-24) உச்சநீதிமன்றம் அறிவித்துள்ள தீர்ப்பில், ‘அதானி குழுமம் மீதான முறைகேடு புகார் தொடர்பாக விசாரணை நடத்த செபிக்கு அதிகாரம் உள்ளது. பங்குச்சந்தையில் அந்நிய முதலீடு தொடர்பான செபி விதிகளில் நீதிமன்றம் தலையிட அவசியமில்லை. மேலும், ஒழுங்காற்று அமைப்புகளின் அதிகார வரம்புக்குள் நீதிமன்றம் தலையிட முடியாது. செபி நடத்தும் விசாரணையில் சந்தேகப்படுவதற்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை.

நிபுணர் குழு அறிக்கையை ஆய்வு செய்து இந்திய முதலீட்டாளர்களின் நலனை உறுதி செய்ய மத்திய அரசு மற்றும் செபிக்கு அதிகாரம் உள்ளது. அதனால், ஹிண்டன்பர்க் அறிக்கையில் சட்டவிதி மீறல் இருந்தால் அந்நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கலாம். அதனால், இது தொடர்பான வழக்கு விசாரணையை சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.ஹிண்டன்பர்க் அறிக்கை அல்லது வேறு அறிக்கை அடிப்படையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த உத்தரவிடவும் முடியாது. 22 புகார்களில் 20 புகார்கள் மீதான விசாரணையை செபி முடித்துவிட்டது. மீதமுள்ள இரண்டு வழக்குகளின் விசாரணையை 3 மாதங்களுக்குள் செபி முடிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளது.

sebi Adani
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe