ADVERTISEMENT

இந்த அதிகாரத்தை உங்களுக்கு யார் கொடுத்தது..? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் கேள்வி...

03:32 PM Nov 02, 2020 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத்துக்கு வழங்கப்பட்டிருந்த நட்சத்திரப் பிரச்சாரகர் அந்தஸ்தை ரத்து செய்ய தேர்தல் ஆணையத்திற்கு யார் அதிகாரம் கொடுத்தது என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள 28 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் நவம்பர் 3ஆம் தேதியன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் 'தப்ரா' தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்துப் பேசிய அம்மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத், அதே தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் இமார்டி தேவியை பாலியல் ரீதியாகத் தரக்குறைவாக பேசினார். இந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையாகியுள்ள நிலையில், அவரின் கருத்துக்கு பா.ஜ.க தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதனைத்தொடர்ந்து, கமல்நாத்தை நட்சத்திரப் பேச்சாளர் என்ற நிலையிலிருந்து நீக்கி உத்தரவிட்டது தேர்தல் ஆணையம். இந்தச் சூழலில் இதுகுறித்து கருத்துத் தெரிவித்த கமல்நாத், "நட்சத்திரப் பிரச்சாரகர் என்பது ஒரு பதவியோ அந்தஸ்தோ அல்ல. தேர்தல் ஆணையத்தின் முடிவைப் பற்றி நான் கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை, நவம்பர் 10க்கு பிறகு எனது கருத்தைத் தெரிவிப்பேன். மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். அவர்களுக்கு எல்லாம் தெரியும்" எனத் தெரிவித்தார். அதன்பின் இடைத்தேர்தலுக்கான தனது நட்சத்திரப் பிரச்சாரகர் அந்தஸ்தை ரத்து செய்த இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து கமல்நாத் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையத்தின் வழக்கறிஞர் ராகேஷ் துவேதி வாதிடுகையில், “மத்தியப் பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரம் முடிந்து, நாளை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் கமல்நாத் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனு தேவையில்லாதது” எனத் தெரிவித்தார். இதற்குப் பதிலளித்த நீதிபதிகள், "நீங்கள் எப்படி அவர்கள் கட்சியின் தலைவர் யார் என்பதைத் தீர்மானிக்க முடியும். நட்சத்திரப் பிரச்சாரகர் அந்தஸ்தைப் பறிப்பது என்பது அவர்களின் கட்சியின் அதிகாரமா அல்லது தேர்தல் ஆணையத்தின் அதிகாரமா? இந்த மனு தேவையானதா அல்லது தேவையற்ற மனுவா என்பது முக்கியமல்ல. கமல்நாத்திடம் இருந்து நட்சத்திரப் பிரச்சாரகர் அந்தஸ்தை ரத்து செய்ய அதிகாரம் உங்களுக்கு எப்படிக் கிடைக்கும். அவ்வாறு செய்ய முடியாது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்குத் தடை விதிக்கிறோம்” என உத்தரவிட்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT