‘சமரசமானாலும் பாலியல் வன்கொடுமை வழக்கை ரத்து செய்ய முடியாது’ - உச்சநீதிமன்றம் அதிரடி!

 Supreme Court says Even if reconcile, the incident case cannot be quashed

ராஜஸ்தான் மாநிலம், சவாய் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. பட்டியலின வகுப்பைச் சேர்ந்த இந்த சிறுமியை, பள்ளி ஆசிரியர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்பட்டது. இந்த சம்பவம் குறித்து ஆசிரியர் மீது புகார் அளித்ததன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதனையடுத்து, ஆசிரியரும், சிறுமியின் குடும்பத்தினரும் சமரசம் செய்து கொண்டு, இந்த வழக்கை ரத்து செய்யுமாறு ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த வழக்கை ராஜஸ்தான் நீதிமன்றமும் கடந்த 2022ஆம் ஆண்டு ரத்து செய்தது. ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து சமூக ஆர்வலரான ராம்ஜி லால் பைர்வா என்பவர், உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்தார்.

இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சி.டி.ரவிக்குமார் மற்றும் பி.வி.சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘இந்த வழக்கில் இருதரப்புக்கும் இடையே தகராறு தீர்க்கப்பட வேண்டும் என்றும், நல்லிணக்கத்தைப் பேண வழக்கு மற்றும் அது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் எப்படி முடிவுக்கு வந்தது என்பதைப் புரிந்து கொள்ள முடியாமல் திணறுகிறோம்.

குற்றம் சாட்டப்பட்டவர் செய்த செயல் போக்சோ சட்டத்தின் 7வது பிரிவின் கீழ் பாலியல் வன்கொடுமை குற்றமாகும், இது மூன்று ஆண்டுகளுக்குக் குறையாத மற்றும் ஐந்து ஆண்டுகள் வரை நீட்டிக்கக் கூடிய சிறைத்தண்டனையுடன் கூடிய தண்டனையாக இருக்கும். குழந்தைகளுக்கு எதிராக இதுபோன்ற குற்றங்களைச் செய்வது கொடூரமானதாகவும், தீவிரமானதாகவும் கருதப்பட வேண்டும். இத்தகைய குற்றங்களைச் செய்வது தனிப்பட்ட இயல்புடைய குற்றங்கள் என்று சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.எனவே, இந்த மனுவை எதிர்த்து ஆசிரியரும், பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையும் சமர்பித்த மனுவை நிராகரிப்படுகிறது. புகார்தாரரும், குற்றம் சாட்டப்பட்டவர்களும் சமரசம் செய்து கொண்டால் பாலியல் துன்புறுத்தல் வழக்கை ரத்து செய்ய முடியாது குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் மீதான வழக்கு விசாரணை மற்றும் குற்றவியல் நடவடிக்கை சட்டப்படி நடக்கும்’ என்று தெரிவித்தனர்.

case Rajasthan
இதையும் படியுங்கள்
Subscribe