மதமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் கைதாகி சிறையில் இருந்த ஒருவருக்கு ஜாமீன் வழங்கிய போதிலும் விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டதால், குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரப் பிரதேச மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Advertisment

உத்தரப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் மதமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் அளித்த மேல்முறையீட்டு மனு காரணமாக கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி அவருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஜாமீன் வழங்கிய போது அவரை சிறையில் இருந்து விடுவிக்காமல் காவலில் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக தொடர்ந்த வழக்கில் காசியாபாத்தில் உள்ள விசாரணை நீதிமன்றம் மே 27ஆம் தேதி அன்று குற்றம் சாட்டப்பட்டவரை காவலில் இருந்து விடுவிக்குமாறு கண்காணிப்பாளர் ஜெயிலருக்கு உத்தரவை பிறப்பித்தது. அதன்படி, குற்றம் சாட்டப்பட்ட நபர் விடுதலை செய்யப்பட்டார். 

Advertisment

இருப்பினும் உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கிய போதிலும் விடுவிக்க தாமதம் ஏற்பட்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்ட நபர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.எஸ்.விஸ்வநாதன் மற்றும் என்.கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று (25-06-25) விசாரணை வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘அரசியலமைப்பின் கீழ் அளிக்கப்பட்ட சுதந்திரம் என்பது மதிப்புமிக்க மற்றும் விலைமதிப்பற்ற உரிமை. அரசியலமைப்பின் 21 வது பிரிவின் கீழ் அளிக்கப்பட்ட சுதந்திரத்தின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் அதிகாரிகள் உணர்ந்து செயல்பட வேண்டும்’ என்று கூறி அதிகாரிகளை கண்டித்தனர். மேலும், காசியாபாத் மாவட்ட சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ரூ.5 லட்ச தற்காலிக இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரப் பிரதேச மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.