/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/supre-ni_13.jpg)
உத்தரப்பிரதேசம் மாநிலம் சம்பல் பகுதியில் உள்ள ஷாஹி ஜமா மசூதியை, இந்து கோயிலை இடித்து கட்டப்பட்டிருந்தாக தொடரப்பட்ட வழக்கில், மசூதியை ஆய்வு செய்ய உள்ளூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி நவம்பர் 19ஆம் தேதி உள்ளூர் போலீஸார் மற்றும் மசூதி நிர்வாகத்தினர் முன்னிலையில் மசூதியில் ஆய்வு செய்யப்பட்டது. அதன்படி, ஆய்வு செய்வதற்காக வந்த ஆய்வுக் குழுவினருக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் மீது கல் வீச்சு தாக்குதல் நடந்தது. இதனையடுத்து, ஏற்பட்ட வன்முறையில் அங்கு 4 பேர் பலியாகினர். இதனால், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நடந்த சில தினங்களிலே, ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் தர்காவை இந்து கோயிலை இடித்து கட்டுப்பட்டுள்ளதாக இந்து அமைப்பான இந்து சேனா தலைவர் விஷ்ணு குப்தா சார்பில் அஜ்மீரில் உள்ள உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், மத்திய சிறுபான்மையினர் விவகார அமைச்சகம் மற்றும் இந்திய தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியது. மேலும், இந்த வழக்கு விசாரணையை டிசம்பர் 20ஆம் தேதி (20-12-24) ஒத்திவைத்து உத்தரவிட்டது.
அதே போல் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி, மதுராவில் உள்ள ஷாஹி ஈத்கா மசூதி என பல்வேறு மசூதிகள், இந்து கோயில்களை இடித்துக் கட்டப்பட்டதாகக் கூறி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு அந்த விசாரணை நடைபெற்று வருகின்றன. இதில், ஞானவாபி மசூதியில் ஆய்வு மேற்கொள்ள தொல்லியல் ஆய்வு நிறுவனத்திற்கு நீதிமன்றத்திற்கு அனுமதி அளித்திருக்கிறது. அதன்படி, தொல்லியல் ஆய்வு நிறுவனம் அங்கு ஆய்வு நடத்தி வருகிறது.
இந்த நிலையில், வழிபாட்டுத் தலங்கள் சட்டம், 1991 இன் அரசியலமைப்புச் சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணாம் பி.வி சஞ்சய் குமார், கே.வி விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அவர்கள் கூறியதாவது, “இந்த வழக்கு நீதிமன்றத்தின் முன் உள்ளதால், புதிய வழக்குகள் எதுவும் பதிவு செய்யப்படவோ அல்லது நடவடிக்கைகளுக்கு உத்தரவிடப்படவோ கூடாது என்று அறிவுறுத்துவது பொருத்தமானது என்று கருதுகிறோம்.
நிலுவையில் உள்ள வழக்குகளில் நீதிமன்றங்கள் எந்தவொரு பயனுள்ள உத்தரவையும் அல்லது இறுதி உத்தரவுகளையும் பிறப்பிக்காது. ஒரு வழக்கு நம் முன் நிலுவையில் இருக்கும்போது, ​​வேறு எந்த நீதிமன்றமும் அதை விசாரிப்பது நியாயமா? நாங்கள் செயல்பாட்டின் வரம்பில் உள்ளோம். ராமஜென்மபூமி வழக்கும் எங்களிடம் உள்ளது. எனவே, தற்போதுள்ள மதக் கட்டமைப்புகளின் மதத் தன்மையை ஆய்வு செய்யக் கோரிய வழக்குகளில் எந்த உத்தரவும் பிறப்பிக்கவோ, கணக்கெடுப்பு நடத்தவோ கூடாது” என்று கூறி உத்தரவிட்டுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)