Skip to main content

ஊரடங்கில் ஊழியர்களுக்கு முழு ஊதியத்தை வழங்கும் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு...

Published on 12/06/2020 | Edited on 12/06/2020

 

supreme court on lockdown salary case

 

ஊழியர்களுக்கு முழு ஊதியம் தராத தனியார் நிறுவனங்கள் மீது ஜூலை வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. 


ஊரடங்கு காலத்தில் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவருக்கும் தனியார் நிறுவனங்கள் எந்தவித பிடித்தமும் இன்றி முழு ஊதியத்தை வழங்க வேண்டும் என 2005-ம் ஆண்டு தேசியப் பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி, மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. கடந்த மார்ச் 29 அன்று இந்த அறிவிப்பு வெளியான நிலையில், இதனை எதிர்த்து பல்வேறு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. ஊரடங்கு காரணமாக உற்பத்தி முடங்கியுள்ளதால், வருமானம் ஏதும் இல்லாத சூழலில், முழு ஊதியத்தையும் உடனடியாக வழங்குவது முடியாத காரியம் என நிறுவனங்கள் சார்பில் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை கடந்த மே மாதம் 15-ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், அடுத்த இரு வாரங்களுக்கு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என மத்திய அரசுக்கு உத்தரவிட்டதோடு, இந்த விவகாரத்தில் மத்திய அரசு பதில் அளிக்கவும் கோரியிருந்தது. இதனையடுத்து மார்ச் 29-ம் தேதி பிறப்பித்த உத்தரவை மத்திய அரசு திரும்பப் பெற்றது. மேலும், நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், "கடந்த மார்ச் 29-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவு அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது அல்ல.

 

லாக்டவுன் காலத்தில் ஒப்பந்த ஊழியர்களும், தொழிலாளர்களும் ஊதியமில்லாத சூழலுக்கு ஆட்படக்கூடாது என்பதற்காகவே அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. நிறுவனங்கள், முழுமையான ஊதியத்தை வழங்க முடியாத சூழலில் இருந்தால் அதற்கான ஆதாரங்களை, தங்களின் பேலன்ஸ் ஷீட்டிலும், வரவு செலவுக் கணக்கிலும் குறிப்பிட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம்” எனத் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் இன்று புதிய உத்தரவுகளை பிறப்பித்த உச்சநீதிமன்றம், ஊழியர்களுக்கு முழு ஊதியம் தராத தனியார் நிறுவனங்கள் மீது ஜூலை வரை எந்த கடுமையான நடவடிக்கையும் எடுக்கக்கூடாது எனவும், நிறுவனங்கள், தங்களது ஊழியர்களுடன் அமர்ந்து பேசி, ஊதியம் வழங்குவது தொடர்பாக சுமுக முடிவை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்