
உத்தரப் பிரதேசம் மாநிலம், நொய்டாவைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவர், தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக 23 வயது நபர் மீது போலீசில் புகார் அளித்தார். அதில், தனது ஆடை பிராண்டை (Brand) விளம்பரப்படுத்துவதற்காக கடந்த 2021இல் சோஷியல் மீடியா இன்ப்ளூயன்சரான (Social media influencer) குற்றம் சாட்டப்பட்ட நபரை சமூக ஊடகம் மூலம் அந்த பெண் அணுகியுள்ளார். இவர்களுக்குள் ஏற்பட்ட பண பரிமாற்றத்தில், அந்த பெண்ணுக்கு குற்றம் சாட்டப்பட்ட நபர் ரூ.20,000 கொடுப்பதாக இருந்தது. இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், அந்த நபருடனான அனைத்து உறவுகளையும் முறித்துக் கொள்ள பெண் முடிவு செய்துள்ளார்.
இதற்கிடையில், நொய்டாவில் உள்ள பெண்ணின் வீட்டிற்குச் சென்ற நபர் ரூ.20,000 பணத்தைத் திருப்பிக் கொடுத்து மன்னிப்பு கேட்டுள்ளார். இதையடுத்து அவர்களுக்குள் சமாதானம் எட்டப்பட்டது. அதன் பின்னர், ஒரு பிராண்ட் படப்பிடிப்புக்காக தன்னுடன் வருமாறு அந்த பெண்ணை அழைத்துள்ளார். அதன் பேரில் இருவரும் ஒன்றாக பயணிக்கத் தொடங்கியுள்ளனர். பயணத்தின் போது, குற்றம் சாட்டப்பட்ட நபர் அந்த பெண்ணுக்கு போதைப்பொருள் கலந்த இனிப்புகளைக் கொடுத்ததாகவும், அதில் அந்த பெண் சுயநினைவை இழந்ததாகவும் கூறப்படுகிறது. அதன் பின்னர், அந்த பெண்ணை ஒரு ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், அந்த பெண்ணிடம் இருந்த பணத்தைத் திருடி, பெண்ணுடைய அந்தரங்க புகைப்படத்தை எடுத்ததாகவும் கூறப்படுகிறது. அதன் பிறகு, அந்த பெண்ணை ஜம்முவுக்கு பயணிக்க வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. அங்கு அந்த பெண்ணை, அவர் இரண்டரை ஆண்டு காலமாக தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டல் விடுத்ததாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த புகாரின் அடிப்படையில், அந்த நபர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 376 (வன்கொடுமை), 354 (பெண் மீது தாக்குதல்), 323 (தானாக முன்வந்து காயப்படுத்துதல்), 506 (குற்றவியல் மிரட்டல்), 509 (ஒரு பெண்ணின் கண்ணியத்தை அவமதித்தல்) மற்றும் 34 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி குற்றம் சாட்டப்பட்ட நபர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அமர்வு முன்பு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது, ‘ஒன்பது மாதங்களாக குற்றம் சாட்டப்பட்ட நபர், சிறையில் இருந்தும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவில்லை. ஒரு கையால் கைதட்ட முடியாது. ஐபிசி பிரிவு 376இன் கீழ் காவல்துறை எந்த அடிப்படையில் வழக்குப்பதிவு செய்தது. அந்த பெண் ஒன்றும் குழந்தை இல்லை, அவருக்கு 40 வயது ஆகிறது. அவர்கள் ஒன்றாக ஜம்முவுக்குச் சென்றிருக்கிறார்கள். ஏன் 376இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது?. அந்தப் பெண் ஜம்முவுக்கு ஏழு முறை சென்றிருக்கிறார். குற்றம் சாட்டப்பட்டவர் ஒன்பது மாதங்களாக சிறையில் இருப்பதாலும், இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படாததாலும், இடைக்கால ஜாமீன் வழங்க இது பொருத்தமான வழக்கு. குற்றம் சாட்டப்பட்டவரை விசாரணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு இடைக்கால ஜாமீன் வழங்கப்படுகிறது. அவர் தனது சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தக்கூடாது, பெண்ணைத் தொடர்பு கொள்ள முயற்சிக்கக்கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது’ என்று கூறி அந்த நபருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.