அங்கித் திவாரி வழக்கு; உச்சநீதிமன்ற நீதிபதி பரபரப்பு கருத்து!

Supreme Court judge sensational opinion on Ankit Tiwari case

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துணை சூப்பிரண்டாக இருக்கக்கூடிய டாக்டர் சுரேஷ்பாபுவின் சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்காமல் இருக்க ரூ. 20 லட்சம் லஞ்சம் பெற முயன்றபோது, கடந்த ஆண்டுடிசம்பர் 1 ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டார். அதன்பின் திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டு மதுரை மத்திய சிறைக்கு மாற்றினார்கள்.

அதே சமயம் அங்கித் திவாரி, தான் பெற்ற லஞ்சப் பணத்தை தன்னுடன் பணியாற்றும் மேலும் சில அதிகாரிகளுக்கு வழங்கியதாகத் தெரிவித்திருந்தார். எனவே லஞ்சப் பணத்தில் வேறு யாருக்கேனும் பங்கு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் முடிவு செய்து திண்டுக்கல் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் அங்கித் திவாரியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். இதனைத்தொடர்ந்து,கைது செய்யப்பட்ட அங்கித் திவாரி மீண்டும் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக திண்டுக்கல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில்நேற்று (24-01-24) ஆஜர்படுத்தப்பட்டார். அப்போதுநீதிபதி மோகனா, அங்கித் திவாரியை வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இதனிடையே, அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு எதிரான லஞ்ச வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மனு அளித்திருந்திருந்தது. இது தொடர்பான மனு இன்று (25-01-24) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், “பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்துவதில்லை. உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை அமலாக்கத்துறை எந்தவித விசாரணையும் நடத்தாதது ஏன்?அசாம் முதல்வர் மீது எப்ஐஆர் உள்ள நிலையில் அந்த வழக்கை அமலாக்கத்துறை விசாரித்ததா?” என்று கேள்வி எழுப்பினார்.

Supreme Court judge sensational opinion on Ankit Tiwari case

இதனைத்தொடர்ந்து, இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி விஸ்வநாதன், “பழிவாங்கும் போக்குடன் அமலாக்கத்துறை செயல்படுவதை தடுக்க புதிய நடைமுறையை உருவாக்க வேண்டும். பழி வாங்குதல் என்ற புகார் எழாத வகையில் நடவடிக்கை எப்படி தொடங்க வேண்டும் என்று நெறிமுறைகள் வகுக்க வேண்டும். அமலாக்கத்துறை உள்நோக்கத்துடன் சில வழக்குகளை கையில் எடுக்கிறது. உண்மையான வழக்குகளில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். அதே வேளையில், அமலாக்கத்துறை உள்நோக்கத்துடன் எடுக்கும் சில வழக்குகளில் நிரபராதிகள் தண்டிக்கப்படக்கூடாது” என்று கூறினார்.

மேலும் அவர், அங்கித் திவாரி கைது தொடர்பான ஆவணங்களை தங்களுக்கு வழங்க வேண்டும் என்ற அமலாக்கத்துறை அளித்த கோரிக்கையை நிராகரித்தார். இதனைத்தொடர்ந்து, அங்கித் திவாரி கைது பற்றிய ஆவணங்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டார். மேலும், அங்கித் திவாரி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய அமலாக்கத்துறை தொடர்ந்து மனு மீது 2 வாரத்தில் பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதையும் படியுங்கள்
Subscribe