/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/arvindkeni.jpg)
டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டார். சுமார் 50 நாட்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால், தன் மீதான கைது நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்து வந்த உச்சநீதிமன்றம் கடந்த மே மாதம் 10ஆம் தேதி அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது.
மேலும் அந்த ஜாமீன் உத்தரவில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1 வரை மட்டுமே இடைக்கால ஜாமீன் வழங்குவதற்கான உத்தரவைப் பிறப்பிப்பதாகத் தெரிவித்திருந்தது. அதோடு ஜூன் 2ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் சரணடைய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் பிறகு, அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். இதனிடையே, தனக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை நீட்டிக்கக் கோரி அரவிந்த் கெஜ்ரிவால் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால், அந்த மனு நிராகரிக்கப்பட்டதால், ஜூன் 2ஆம் தேதி, அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் சரணடைந்தார். இதனை தொடர்ந்து, ஜூன் 26ஆம் தேதி இந்த முறைகேடு தொடர்பாக விசாரிப்பதற்காகஅரவிந்த் கெஜ்ரிவாலை சி.பி.ஐ கைது செய்தது.
இதனிடையே, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அமலாக்கத்துறை தன்னை கைது செய்தது தவறு எனக் குறிப்பிட்டு டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இருப்பினும். சி.பி.ஐ கைது செய்ததன் காரணமாக அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையிலேயே இருந்து வந்தார். இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு கடந்த 5ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி உஜ்ஜல் பாயன் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. அப்போது இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், இவ்வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 13ஆம் தேதி ஒத்திவைத்தனர். மேலும், நீதிமன்றத்துக்கு பிணைத் தொகையாக ₹10 லட்சம் செலுத்த வேண்டும், ஜாமீனில் வெளியே வந்த பிறகு, முதல்வர் அலுவலகத்திற்கு செல்லக் கூடாது, பொது இடங்களில் வழக்கு தொடர்பாக பேசக் கூடாது, அரசு கோப்புகளில் கையெழுத்திடக் கூடாது, வழக்கு தொடர்பாக யாரையும் சந்திக்கவும், ஆவணங்களை பார்வையிடவும் கூடாது என்று பல்வேறு நிபந்தனைகள் விதித்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று (13-09-24) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘2023ஆம் ஆண்டு மார்ச் மாதமே சி.பி.ஐ.யால் அரவிந்த் கெஜ்ரிவால் விசாரிக்கப்பட்டிருக்கிறார். ஆனால், அப்போது சி.பி.ஐ அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்யவில்லை. அமலாக்கத்துறை வழக்கில் கெஜ்ரிவால் ஜாமீன் மனு நிலுவையில் இருந்த நிலையில், அவர் சி.பி.ஐயால் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்றால், சி.பி.ஐயின் அவசர நடவடிக்கையாக இருக்கிறது’ என்று கருத்து தெரிவித்து பல்வேறு நிபந்தனைகள் விதித்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, சி.பி.ஐ கைது செய்த வழக்கில் ஜாமீன் வழங்கியுள்ளது. 2 வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்ததால் சிறையிலிருந்து அரவிந்த் கெஜ்ரிவால் விரைவில் வெளியே வரவுள்ளார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)