Skip to main content

"இது மாணவர்களுக்கு பாதகமாக இருக்க முடியாது" - நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு!

Published on 04/10/2021 | Edited on 04/10/2021

 

neet

 

இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு, கடந்த மாதம் 12ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வுக்கு முன்னரே நீட் வினாத்தாள் கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இருப்பினும் அந்தக் குற்றச்சாட்டை நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை திட்டவட்டமாக மறுத்தது. ஆனால், தேர்வு நாளன்று ஜெய்ப்பூரில் உள்ள நீட் தேர்வு மையத்தில் அதிரடி சோதனை நடத்திய ராஜஸ்தான் போலீசார், நீட் வினாத்தாளைக் கசியவிட்டு முறைகேட்டில் ஈடுபட்ட நீட் தேர்வு எழுதிய மாணவி, அவரது மாமா உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர்.

 

இதனையடுத்து நீட் தேர்வு தொடர்பாக எழுந்த மோசடி, ஆள்மாறாட்டம், முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுகளையும், வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டையும் முன்வைத்து, நடந்து முடிந்த இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வை இரத்து செய்துவிட்டு புதிய தேர்வை நடத்த உத்தரவிடுமாறு இளங்கலை நீட் தேர்வு எழுதிய சில மாணவர்கள் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

 

இந்தநிலையில் இன்று (04.10.2021) இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், "ஆள்மாறாட்டம் மற்றும் வினாத்தாள் கசிவு ஆகிய நிகழ்வுகள் தேர்வு எழுதிய லட்சக்கணக்கான மாணவர்களுக்குப் பாதகமாக இருக்க முடியாது" என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த வழக்கு விசரணையின்போது "என்ன மாதிரியான ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன? லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வெழுதியுள்ளனர். தேர்வு மொத்தமும் ரத்து செய்யப்பட வேண்டுமா?” எனவும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், மாணவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞருக்கு 5 லட்சம் அபராதம் விதிக்க இருப்பதாக முதலில் உச்ச நீதிமன்றம் கூறியது. இருப்பினும் பின்னர் வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்று அபராதம் விதிக்காமல் மனுவை தள்ளுபடி செய்தது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு; வெளியான முக்கிய அறிவிப்பு!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Important announcement For the attention of NEET students

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இளங்கலை நீட் நுழைவுத் தேர்வுக்காக விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தேசியத் தேர்வு மையம் அறிவித்துள்ளது.

2024 - 25 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு (2024) மே மாதம் 5 ஆம் தேதி நடைபெறும் எனத் தேசியத் தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்திருந்தது. தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தேசிய தேர்வு மையம் தெரிவித்திருந்தது. 

அதன்படி, கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி முதல், மார்ச் 16 ஆம் தேதி வரை நீட் தேர்வு எழுதும் மாணவ - மாணவிகள் ஆன்லைன் வழியாக விண்ணப்ப பதிவை மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கையை அடிப்படையாகக் கொண்டு மார்ச் 16ஆம் தேதி வரை கால அவகாசம் நிறைவடைந்த நிலையில், ஏப்ரல் 10ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக தேசிய தேர்வு மையம் அறிவித்துள்ளது. 

மேலும், https://exams.nta.nic.in/NEET என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை நாளை (09-04-24) மற்றும் நாளை மறுநாள் (10-04-24) சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. நீட் தகுதி தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தகவல் தொகுப்பு கையேடு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, www.nta.ac.in என்ற இணையதளத்தைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். குறிப்பிட்ட அவகாசத்திற்குள் விண்ணப்ப முடியாதவர்களின் நலன் கருதி தேசிய தேர்வு முகமை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

Next Story

‘உங்க ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார்?’-வறுத்தெடுத்த உச்சநீதிமன்றம்

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
What is your governor doing?- The Supreme Court asked

பொன்முடி வழக்கில் தமிழக ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் தண்டனை பெற்றிருந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி, தண்டனையை எதிர்த்து செய்த மேல்முறையீட்டு வழக்கில் அவரது தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்திருந்தது. இதன் காரணமாக மீண்டும் பொன்முடி அமைச்சர் பதவி ஏற்பதாகத் தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் பொன்முடி பதவி ஏற்பதாக இருந்த 14 ஆம் தேதி ஆளுநர் திடீரென டெல்லி புறப்பட்டார்.

இதனால் பதவியேற்பு காலதாமதம் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த 17 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு ஆளுநர் எழுதிய கடிதத்தில், “பொன்முடி வழக்கில் உச்சநீதிமன்றம் தண்டனையைத்தான் நிறுத்தி வைத்துள்ளது. அவரை குற்றவாளி இல்லை என்று தீர்ப்பளிக்கவில்லை. திருக்கோவிலூர் தொகுதிக்கு சட்டமன்ற உறுப்பினர் இல்லாமல் இருக்கக் கூடாது என்பதற்காக இந்த தீர்ப்பை வழங்கியிருக்கலாம்” எனத் தெரிவித்திருந்தார். இச்சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

பொன்முடி அமைச்சராக மீண்டும் பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ரவி மறுத்ததால், அவருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. அந்த மனுவில், ‘அரசியல் சாசனத்தில் 164(1) பிரிவை ஆளுநர் ஆர்.என். ரவி அப்பட்டமாக மீறுகிறார். தமிழ்நாட்டின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இணையாக ஆட்சி நடத்த ஆளுநர் ஆர்.என். ரவி முயற்சிக்கிறார். எனவே, பொன்முடிக்கு அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

What is your governor doing?- The Supreme Court asked

ஆளுநருக்கு எதிரான இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. ‘பொன்முடியை அமைச்சராக்க முடியாது என ஆளுநர் கூறுவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. பத்து மசோதாக்களை சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றி அனுப்பிய பிறகும் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை’ உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை தமிழக அரசு நீதிமன்றத்தில் வாதங்களாக வைத்தது.

அதனைத் தொடர்ந்து, 'தான் என்ன செய்கிறோம் என்று ஆளுநருக்கு தெரியாதா?' என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி காட்டமாக தெரிவித்ததோடு, தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்த பிறகும் பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் மறுப்பது ஏன்? இது நீதிமன்ற அவமதிப்பாகும். உச்சநீதிமன்றத்துடன் ஆளுநர் விளையாட வேண்டாம். ஆளுநருக்கு பதவியேற்பை நிறுத்தி வைக்க அதிகாரம் இல்லை. ஆளுநர் மறுத்தால் நீதிமன்றம் உத்தரவிடும்' என காட்டமாக தெரிவித்தார்.

மேலும், ஆளுநர் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும் என ஒன்றிய அரசின் அட்டர்னி ஜெனரலுக்கு உச்சநீதிமன்றம் தனது கண்டிப்பை தெரிவித்துள்ளது. 'உங்கள் ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார்' என்று ஒன்றிய அரசு தரப்பு வழக்கறிஞரிடமும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளதோடு, இந்த விவகாரத்தில் நாளைக்குள் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என கெடு விதித்துள்ளது உச்சநீதிமன்றம்.