Skip to main content

“ஒரு வழியாக தூக்கத்திலிருந்து விழித்துவிட்டீர்கள்” - உத்தரகாண்ட் அரசை விமர்சித்த உச்சநீதிமன்றம்

Published on 30/04/2024 | Edited on 30/04/2024
Supreme Court criticizes Uttarakhand government for patanjali issue

ஆங்கில மருத்துவம் தொடர்பாக தவறான தகவல்களை விளம்பரம் செய்ததற்காக பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதனையடுத்து இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது ராம்தேவும், பாலகிருஷ்ணாவும் நேரில் ஆஜராகி மன்னிப்பு கேட்க விரும்புவதாகவும், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி இருப்பதாகவும் வழக்கறிஞர் கூறினார். இவ்வாறு தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்கு கடந்த 16ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பாபா ராம்தேவ் மற்றும் ஆச்சார்யா பால்கிருஷ்ணா ஆகியோர் பதஞ்சலி ஆயுர்வேதத்தின் தவறான விளம்பரங்கள் தொடர்பான விசாரணையில் கலந்து கொள்ள உச்ச நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது ராம்தேவ் பகிரங்க மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி தெரிவித்தார்.

இதனையடுத்து பாபா ராம்தேவ் உச்ச நீதிமன்றத்தில் அளித்த உறுதியை மீறி விளம்பரம் செய்ததற்காக நேரில் ஆஜாராகி மன்னிப்பு கேட்டார். அப்போது, “தவறாக கொடுத்த விளம்பரத்தை நியாயப்படுத்தவில்லை. உச்ச நீதிமன்றத்தில் அளித்த உறுதியை எதிர்காலத்தில் மீற மாட்டேன். பொது மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறேன்” என ராம்தேவ் உறுதியளித்தார். இதனையடுத்து மனுதாரர்கள் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டதால் வழக்கு விசாரணை 23 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கின் விசாரணை கடந்த 23ஆம் தேதி அன்று நடைபெற்றது. அப்போது. ராம்தேவ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, ‘பதஞ்சலி நிறுவனம் 61 நாளேடுகளில் பகிரங்க மன்னிப்பு கோரி விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளதாக’ தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள், ‘பதஞ்சலி நிறுவனம் மன்னிப்பு கோரும் விளம்பரங்களை லென்ஸ் வைத்து தேடும் அளவுக்கு சிறிதாக பொருளை விளம்பரப்படுத்துவது போல் செய்துள்ளது. மன்னிப்பும் பெரிய அளவில் வரும் ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் விளம்பரமாக வெளியிட வேண்டும்’ என்று கண்டனம் தெரிவித்து இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர். மேலும், தவறான விளம்பரத்தை வெளியிட்ட பதஞ்சலி நிறுவனத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத மத்திய அரசின் செயல் அதிருப்தியாக உள்ளது என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து, பத்திரிகைகளில் பதஞ்சலி நிறுவனம், தவறான விளம்பரம் அளித்தததாகக் கூறி மன்னிப்பு கோரியது. 

Supreme Court criticizes Uttarakhand government for patanjali issue

இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் இன்று (30-04-24) விசாரணைக்கு வந்தது. அப்போது, உத்தரகாண்ட் மாநில அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், ‘பதஞ்சலி நிறுவனம் மற்றும் அதன் இணை நிறுவனமான திவ்யா மருந்தகத்தின் 14 மருந்துகளுக்கு, மாநில அரசின் மருந்து உரிமம் வழங்கும் ஆணையம் ஏப்ரல் 15ஆம் தேதி தடை விதித்திருக்கிறது. மேலும், பதஞ்சலி நிறுவனத்தின் மீதும் பாபா ராம்தேவ் மீதும் பல்வேறு குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது’ எனத் தெரிவித்தது.

இதனைப் பதிவு செய்துக்கொண்ட நீதிபதிகள் ஹிமா கோஹ்லி மற்றும் அஹ்சானுதீன் அமானுல்லா, “முன்பு பதஞ்சலி மட்டுமே இருந்தது, இப்போது பெயர்கள் உள்ளன. அதை நாங்கள் பாராட்டுகிறோம். ஒருமுறை நீங்கள் ஏதாவது செய்ய நினைத்தால், மின்னல் வேகத்தில் அதைச் செய்கிறீர்கள் என்பதை இது காட்டுகிறது. ஆனால் செய்ய கூடாது என நினைத்துவிட்டால், பல ஆண்டுகளாக எதுவும் நகராது. மூன்று நாட்களில், நீங்கள் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளீர்கள். கடந்த ஒன்பது மாதங்களாக நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? இறுதியாக, உங்களுக்கு அதிகாரம் மற்றும் பொறுப்புகள் உள்ளன என்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? ஒரு வழியாக தூக்கத்தில் இருந்து விழித்துவிட்டது உத்தரகாண்ட் அரசு. இனி இது போன்ற நடவடிக்கைகளில் நீங்கள் எச்சரிக்கையுடன் நடக்க வேண்டும்” எனக் கூறி இந்த வழக்கு விசாரணையை மே 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 

சார்ந்த செய்திகள்