ஹத்ராஸ் வழக்கு கண்காணிப்பு குறித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு...

supreme court asks allahabad court to monitor hathras case

ஹத்ராஸ் வழக்கின் சிபிஐ விசாரணையை அலகாபாத் நீதிமன்றமே கண்காணிக்கும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஹத்ராஸில் 19 வயது இளம்பெண்ணை நான்கு பேர் சேர்ந்த கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து தாக்கியதாககூறப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்ட பெண், இரண்டு வாரங்கள் உயிருக்குப் போராடி டெல்லி மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இதனைத் தொடர்ந்து நடந்த அடுத்தடுத்த சம்பவங்களும் மிகப்பெரிய சர்ச்சைகளாக வெடித்துள்ளன.

கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி நடைபெற்ற இந்த சம்பவத்திற்கு பின்னர் ஹத்ராஸ் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அப்பெண் அன்று இரவு மேல்சிகிச்சைக்காக அலிகர் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டார். அதன்பிறகு செப்டம்பர் 22 அன்று அப்பெண்ணிற்கு சற்றே நினைவு திரும்பியது. அப்போது விசாரணை நடத்திய ஹத்ராஸ் போலீஸாரிடம் அப்பெண், தான் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து அப்பெண்ணிற்கு அலிகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோதனை நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால், பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் தடயவியல்துறை அறிக்கையில் கிடைக்கவில்லை என காவல்துறை தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனையடுத்து இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. அந்த விசாரணையையும் உச்சநீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என்று மாநில அரசு கோரியிருந்தது. இதுதொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயது பெண் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் சிபிஐ நடத்தும் விசாரணையை அலகாபாத் உயர்நீதிமன்றம் கண்காணிக்கும். வழக்கை கண்காணித்தல், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தாருக்கு பாதுகாப்பு வழங்குதல், சாட்சியங்களுக்கு பாதுகாப்பு வழங்குதல் அனைத்தையும் உயர்நீதிமன்றமே முடிவு செய்யும்" என அறிவித்துள்ளது.

Hathras case Supreme Court
இதையும் படியுங்கள்
Subscribe