/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/arvind-kejriwal-ni_10.jpg)
டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசாடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இதற்கிடையே தன்னுடைய கைது நடவடிக்கையை சட்டவிரோத கைது என அறிவிக்கக் கோரியும், ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் கெஜ்ரிவால் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது.
அதன்பின், சுமார் 50 நாட்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால், தன் மீதான கைது நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்து வந்த உச்சநீதிமன்றம் கடந்த 10ஆம் தேதி அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது.
மேலும், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1 வரை மட்டுமே இடைக்கால ஜாமீன் வழங்குவதற்கான உத்தரவை பிறப்பித்த உச்சநீதிமன்றம், ஜூன் 2 ஆம் தேதி கெஜ்ரிவால் சரணடைய உத்தரவிட்டது. மேலும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டும், முதலமைச்சராக அலுவல் பணிகளில் ஈடுபடக் கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டும் இருந்தது. அதனைத் தொடர்ந்து திகார் சிறையிலிருந்து வெளியே வந்த அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் மீதும், ஆம் ஆத்மி கட்சி மீதும் உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை இன்று (17-05-24) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அப்போது, கெஜ்ரிவால் மற்றும் அமலாக்கத்துறை தரப்பு வாதங்களை கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா,‘ஆம் ஆத்மி மீதான குற்றச்சாட்டை எவ்வாறு நிரூபிக்கப்போகிறீர்கள்’ எனக் கேள்வி எழுப்பினார். மேலும் அமலாக்கத்துறையிடம், ‘கெஜ்ரிவால் கைது நடவடிக்கை எந்த ஆதாரங்கள் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது?. தவறு செய்ததை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் கிடைக்காதவரை கைது நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது’ எனத்தெரிவித்த உச்சநீதிமன்றம் இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் 8வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. மேலும், அமலாக்கத்துறை வழக்கின் குற்றப்பத்திரிகையில் கட்சி பெயர் சேர்க்கப்படுவது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)