/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/baba-ramdev-art_0.jpg)
ஆங்கில மருத்துவம் தொடர்பாக தவறான தகவல்களை விளம்பரம் செய்ததற்காக பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதனையடுத்து இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது ராம்தேவும், பாலகிருஷ்ணாவும் நேரில் ஆஜராகி மன்னிப்பு கேட்க விரும்புவதாகவும், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி இருப்பதாகவும் வழக்கறிஞர் கூறினார். இதனையடுத்து ஆங்கில மருத்துவம் பற்றிய தவறான விளம்பரத்திற்காகவும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறியதற்காகவும் ராம்தேவ் உச்சநீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். மேலும் ஒரு வாரத்திற்குள் புதிய பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்ய ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ணாவுக்கு உச்ச நீதிமன்றம் கடைசியாக அவகாசம் அளித்துள்ளது.
இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள், “நீதிமன்றத்தின் அனைத்து உத்தரவுகளையும் மீறிவிட்டு வழக்கறிஞர் மூலம் மன்னிப்பு கேட்பதை எப்படி ஏற்க முடியும்” எனத் தெரிவித்தனர். அதற்கு பதஞ்சலி நிறுவனத்தின் சார்பில், “நிறுவனத்தின் மீடியா பிரிவு தான் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தியுள்ளனர். அதற்கு மன்னிப்பு கோரியுள்ளோம்” எனத் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, “மீடியா பிரிவு நிறுவனத்தின் கீழ் இல்லாமல் தனியாக இயங்குகிறதா என்ன?. எந்த அடிப்படையில் உங்கள் மருந்து பிற மருந்துகளுக்கு மாற்று என கூறுகிறீர்கள். அறிவியல் ரீதியிலான நிரூபணம் உள்ளதா?. இது குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சகத்தில் ஏதேனும் கோரிக்கை வைத்தீர்களா?. வழக்கு விசாரணையில் இருக்கும் போது எவ்வாறு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்த முடியும்” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும், “மருந்து பற்றி ஆராய்ச்சி செய்துள்ளதாக ராம் தேவும், பால கிருஷ்ணாவும் கூறியுள்ளனர். அது குறித்து விளக்கம் தர வேண்டும். ஒவ்வொருவருக்கும் பாடம் கற்றுக்கொடுப்பதற்காக நாங்கள் இல்லை” என நீதிபதி ஹிமா கோலி காட்டமான கருத்தை பதிவு செய்திருந்தார். அதே சமயம் பதஞ்சலி வழக்கில் ராம்தேவின் மன்னிப்பை ஏற்க முடியாது. ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ணா மீதும் அவதூறு வழக்கு தொடர வேண்டும் என்று தெரிவித்ததுடன், பதஞ்சலி நிறுவனம் வெளியிட்ட விளம்பரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்காத மத்திய அரசுக்கும் உச்சநீதிமன்றம் தனது கண்டனத்தை தெரிவித்திருந்தது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sc-art_24.jpg)
இந்நிலையில் இந்த வழக்கு இன்று (10.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பாபா ராம்தேவ் மற்றும் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோர் விசாரணைக்கு ஆஜரானார்கள். அதனைத் தொடர்ந்து, விளம்பர விவகாரம் தொடர்பாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கிறேன் என்று உச்ச நீதிமன்றத்தில் பாபா ராம்தேவின் பிரமாணப் பத்திரத்தை மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி உச்ச நீதிமன்ற அமர்வு முன் வாசித்து சமர்ப்பித்தார்.
இருப்பினும் பதஞ்சலி நிறுவனம் தொடர்பான வழக்கில் பாபா ராம்தேவ்வின் மன்னிப்பை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர். மேலும் நீதிபதிகள், “நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்கும்போது அலட்சியமாக நடந்துகொள்கிறீர்கள். அதனால் அதே அளவு அலட்சியத்தை ஏன் நீதிமன்றம் உங்கள் மீது காட்டக்கூடாது. இந்த விவகாரத்தில் பதஞ்சலி நிறுவனத்திற்கு நீதிமன்றம் தாராளமாக இருக்க விரும்பவில்லை. பாபா ராம்தேவின் மன்னிப்பை நீதிமன்றம் நம்பவில்லை. உங்களை மனுவை நிராகரிக்கிறோம்” எனக் காட்டமாக தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)