கரோனா பாதிப்பு காரணமாக சிபிஐ (எம்) மூத்த தலைவர் சுண்ணம் ராஜையா மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
நாடு முழுவதும் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் களப்பணியாளர்களான தூய்மை பணியாளர்கள், காவல்துறையினர், மருத்துவர்கள், அரசு ஊழியர்கள், அமைச்சர்கள் ஆகியோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில், தெலங்கானா மாநிலத்தின் முன்னாள் எம்.எல்.ஏ. மற்றும் சிபிஐ (எம்) மூத்த தலைவரான சுண்ணம் ராஜையா கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். 68 வயதான இவர் ஹைதராபாத்திலிருந்து, விஜயவாடாவில் உள்ள கரோனா மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டபோது, உயிரிழந்துள்ளார். மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த இவர் பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக பல போராட்டங்களை முன்னெடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.