Skip to main content

கர்நாடக முதல்வரின் ஆலோசகராக சுனில் நியமனம்!

 

Sunil appointed as Karnataka Chief Minister siddaramaiah advisor

 

கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கிறார் தேர்தல் வியூக நிபுணர் சுனில் கனுகோலு. அவருக்கு  கேபினட் அந்தஸ்து வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. திமுகவின் தேர்தல் வியூக வகுப்பாளராக 2016 முதல் 2019  வரை பணியாற்றியவர் சுனில். 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அவரை அப்பணியிலிருந்து விடுவித்து, அவருக்கு மாற்றாக பிரசாந்த் கிஷோரை நியமித்துக் கொண்டது திமுக தலைமை. 

 

திமுகவிடமிருந்து விலகிய சுனில், அதிமுகவுக்காக பணி புரிய விரும்பி எடப்பாடி பழனிச்சாமியிடம் முயற்சித்தார். ஆனால், அதிமுக பெருந்தலைகள் ஏற்க மறுத்ததால் , சுனிலின் முயற்சி பலிக்கவில்லை. இதனை அடுத்து காங்கிரசின் அகில இந்திய தலைமையிடம் முயற்சித்தார் சுனில். குறிப்பாக ராகுல்காந்தியிடம் நெருங்கினார். பல்வேறு கோணங்களில் நிறைய ஆலோசனைகள் நடந்தன. ஒரு கட்டத்தில், காங்கிரஸ் கட்சியில் சுனில் சேர்ந்தார். அவருக்கு தேர்தல் வியூக நிபுணர் என்ற பதவி கொடுக்கப்பட்டதுடன்,  தேர்தல் ஆலோசனை குழுவிலும் இணைத்துக் கொள்ளப்பட்டார். 

 

இந்த நிலையில்தான், கர்நாடக சட்டமன்ற தேர்தலை கவனித்துக் கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்பட்டது. நடந்து முடிந்த தேர்தலில் கர்நாடகாவில் ஆட்சியை கைப்பற்றியது காங்கிரஸ்.  இந்த சூழலில், தற்போது, கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் ஆலோசகராக சுனில் கனுகோலுவை நியமித்துள்ளது காங்கிரஸ் தலைமை.  இது குறித்து வெளியிடப்பட்ட அரசு உத்தரவில், “பெங்களூருவில் உள்ள ஜேபி நகரைச் சேர்ந்த ஸ்ரீ சுனில் கனுகோலு, முதல்வரின் ஆலோசகராக உடனடியாக நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த உத்தரவு வரும் வரை அவர் இந்த பதவியில் தொடர்வார். அவருக்கு கேபினட் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதுடன், கேபினட் அமைச்சர்களுக்குக் கிடைக்கும் சலுகைகள் அவருக்கு வழங்கப்பட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !