Sudden resignation of Muda leader on case against Siddaramaiah

கர்நாடகா மாநிலத்தில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில், மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (மூடா) சார்பில் நில ஒதுக்கீடு செய்ததில் 4000 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூடா மோசடி வழக்கு என அழைக்கப்படும் இந்த வழக்கில், முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதி பேரில் 14 வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்திருப்பது கர்நாடகா அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இத்தகைய சூழலில் தான் ஊழல் தடுப்புச் சட்டம் 1998 சட்டத்தில் 17வது பிரிவு மற்றும் புதிதாக தற்பொழுது அமலுக்கு வந்திருக்கும் பாரதிய நாகரிக் சுரக் ஷா சம்ஹிதா வழக்கின் சட்டப் பிரிவின் 218வது பிரிவு என இந்த இரண்டு பிரிவுகளின் கீழ் சித்தராமையாவை விசாரிக்க அம்மாநிலத்தின் ஆளுநர் தாவர் சந்த் கெலாட் அனுமதி வழங்கி இருந்தார். இதையடுத்து, நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் மைசூர் லோக் ஆயுக்தா போலீசார், முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதனை தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையும் விசாரணையும் நடத்தி வருகிறது.

Advertisment

இதனால், சித்தராமையா தனது முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்து வருகின்றன. அதே சமயத்தில், இந்த வழக்கில் சித்தராமையா முதல்வர் பதவியில் இருந்து விலகுவார் என்றும் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்தும் காங்கிரஸ் அமைச்சர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் ரகசிய கூட்டம் நடத்துவதாக தகவல் வெளியாகி வருகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் (மூடா) தலைவர் கே மாரிகவுடா இன்று (16-10-24) ராஜினாமா செய்துள்ளார். முதல்வர் சித்தராமையாவுக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் மாரிகவுடா, தனது உடல்நிலையை காரணம் காட்டி இந்த ராஜினாமாவை செய்துள்ளார். அவர் எழுதிய அந்த ராஜினாமா கடிதத்தில், ‘அமைச்சரை சந்தித்து ராஜினாமா கடிதம் அளித்துள்ளேன். முதல்வர் என்னை ராஜினாமா செய்யும்படி அறிவுறுத்தினார், அவருடைய வழிகாட்டுதலின்படி நான் அவ்வாறு செய்துள்ளேன். மேலும், எனது உடல்நிலை காரணங்களுக்காக, நான் பதவி விலக முடிவு செய்துள்ளேன். நீதி விசாரணை நடந்து வருகிறது, அது தொடரும். குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையில் உண்மை வெளிவரும்.

Advertisment

ராஜினாமா செய்ய வேண்டும் என்று என் மீது எந்த அழுத்தமும் இல்லை. என் உடல்நிலை சரியில்லை, அதனால் தானாக முன்வந்து பதவி விலகுகிறேன். முதல்வரை 40 ஆண்டுகளுக்கும் மேலாக தெரியும். அவர் என்னை மாவட்டத் தலைவராக நியமித்தார். மூடா உள்ளிட்ட சட்ட விரோதமான எதையும் செய்யுமாறு என்னிடம் கேட்கவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.