Skip to main content

காக்னிசன்ட் ஊழியர்களுக்கு திடீர் மின்னஞ்சல்!

Published on 30/03/2018 | Edited on 30/03/2018

கடந்த 27ஆம் தேதி முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான காக்னிசன்ட் நிறுவனத்தின் சென்னை, பெங்களூரு வங்கிக் கணக்குகளை வருமான வரித்துறை முடக்கியது. வரி செலுத்தாத புகாரில் 2500 கோடி ரூபாய் அளவிலான வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டது. ஏற்கனவே சில ஐ.டி. நிறுவனங்களில் ஊழியர்களின் வேலை திடீரென பறிபோனது, ஊதிய உயர்வு கிடைக்காமல் இருப்பது, ஆட்குறைப்பு நடவடிக்கைகள் என தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் மத்தியில் கவலையில் இருக்கும் வேளையில் வெளியான இந்த செய்தி காக்னிசன்ட் நிறுவனத்தின் லட்சக்கணக்கான ஊழியர்கள் மத்தியிலும்  பரபரப்பாக  பேசப்பட்டது.

 

cognizant



இந்நிலையில் காக்னிசன்ட் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு ஒரு மின்னஞ்சலை  அனுப்பியுள்ளது. அந்த நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி, கேரன் மெக்லௌளின் அனுப்பியிருக்கும் அந்த மின்னஞ்சலில், "இந்தியாவில் வருமானவரித்துறை காக்னிசன்ட் மேல் எடுத்திருக்கும் நடவடிக்கை குறித்த செய்திகளை நீங்கள் ஊடகங்களின் மூலம் அறிந்திருப்பீர்கள். இந்த அஞ்சலின் மூலம் நமது நிறுவனத்தின் நிலையையும், இந்த நடவடிக்கைகளால் நமது வழக்கமான செயல்பாடுகள் எதுவும் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறேன். 

நாம் நமது வரிகளை செலுத்திவிட்டோம், ஆனால் அவை  இன்னும் பரிமாற்றத்தில் இருப்பதால் வருமானவரித்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதனால், ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற வழக்கமான செயல்பாடுகள் எதுவும் பாதிக்கப்படாது என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கிறோம்.

 

office employees



காக்னிசன்ட் நிறுவனத்தின் நிதிநிலை ஐந்து பில்லியன் டாலர்களுடன் மிக ஆரோக்கியமாக இருக்கிறது. நமது ஊழியர்கள் எந்த கவலையுமின்றி தொடர்ந்து தங்கள் சிறப்பான பணியைத் தொடரலாம்" என்று தெரிவித்துள்ளார்.

கலக்கத்தில் இருந்த காக்னிசன்ட் ஊழியர்கள் இதனால் நிம்மதியடைந்துள்ளார்கள். மேலும், வழக்கமாக மாதத்தின் கடைசி வேலை நாளன்று ஊதியம் செலுத்தப்படும். இந்த முறை சற்று முன்னதாக 27 மார்ச் அன்றே செலுத்தியிருக்கிறது காக்னிசன்ட் நிறுவனம். வங்கிக் கணக்கு முடக்கப்படலாம் என்பது தெரிந்து முன்னரே ஊதியத்தை அளித்திருக்கிறது காக்னிசன்ட். 

இந்தியாவில் முக்கிய வேலைவாய்ப்பாகத் திகழும் தகவல் தொழில்நுட்பத் துறையில் அவ்வப்போது நிலையாமை நேர்கிறது.   

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தலுக்குப் பிறகு ஷாக் கொடுக்க இருக்கும் சிம்கார்டு நிறுவனங்கள்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
SIM card companies to give a shock after the election

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக சென்று கொண்டிருக்கும் நிலையில், தேர்தல் முடிந்த கையோடு செல்போன் நிறுவனங்களின் கட்டணங்கள் உயர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வெளியான தகவலின் அடிப்படையில் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும் செல்போன் கட்டண உயர்வு 15 சதவீதத்திலிருந்து 17 சதவீதம் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏர்டெல், வோடபோன், ஜியோ உள்ளிட்ட அனைத்து நிறுவன கட்டணங்களும் உயர்த்தப்பட வாய்ப்புள்ளது.

ரூபாய் 208 ஆக உள்ள பார்த்தி ஏர்டெலின் ஒரு பயனருக்கான சராசரி வருவாய் 2027 இறுதியில் ரூபாய் 286 என உயரும் என கூறப்படுகிறது. கட்டணம் உயர்த்தப்படுவதன் மூலம் பார்த்தி ஏர்டெல் நிறுவனத்திற்கு பல மடங்கு வருவாய் கிடைக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இறுதியாக கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் செல்போன் கட்டணம் 20 சதவீதம் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story

கன்னடர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கர்நாடக அரசு; எம்.என்.சி நிறுவனங்களுக்கு அதிரடி உத்தரவு!

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
 Action order for MNC companies and Karnataka Government giving priority to Kannadas

சமீபத்தில் பெங்களூரில் கன்னட மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்காததால், பெங்களூரில் உள்ள கன்னட மொழி இல்லாத பெயர்ப் பலகை கொண்ட வணிக நிறுவனங்களைக் குறிவைத்து கன்னட ஆதரவு அமைப்பினர் வன்முறை போராட்டம் நடத்தினர். இதனையடுத்து, வணிக நிறுவனங்களில் கன்னட மொழி உள்ள பெயர்ப் பலகையை வைக்க வேண்டும் என்ற அவசர சட்டத்தைக் கர்நாடகா அரசு கொண்டு வந்தது.

இதனிடையே, கர்நாடகாவில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களில் கன்னடம் தவிர பிறமொழி பேசுபவர்கள் தான், அதிகமாக வேலைக்கு எடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனால், கர்நாடகா இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கன்னட அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

இந்த நிலையில், தங்கள் நிறுவனத்தில் எத்தனை கன்னடர்கள் பணிபுரிகிறார்கள் என்ற விவரத்தை அந்த நிறுவனங்களின் வரவேற்பு அறையில் காட்சி பலகையாக வைக்கும்படி கர்நாடகா அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கர்நாடக கலாச்சாரத்துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி கர்நாடக சட்டப்பேரவையில் பேசியதாவது, “கர்நாடகாவில் உள்ள நிறுவனங்கள், வர்த்தக அமைப்புகளின் பெயர்ப் பலகைகளில் 60 சதவீதம் கட்டாயம் கன்னட மொழியில் எழுதி இருக்க வேண்டும் என்பது தொடர்பாக கர்நாடக அரசு புதிய சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. கன்னட மொழி மற்றும் கன்னடர்களின் வளர்ச்சிக்காக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், கர்நாடகாவில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களில் கன்னடர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என்று புகார் எழுந்துள்ளது. இதனைக் கண்காணிக்கும் வகையில், கர்நாடகா அரசு புதிய உத்தரவைக் கொண்டு வந்துள்ளது. அதில் கர்நாடகாவில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றும் கன்னட ஊழியர்களின் எண்ணிக்கையை அந்தந்த நிறுவனங்கள் தங்கள் அறிவிப்பு பலகையில் தெரிவிக்க வேண்டும். இந்த நடவடிக்கைக்கு இணங்கத் தவறினால், அந்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் ரத்து செய்யப்படும். கன்னடர்கள் மற்றும் கன்னட மொழியின் நலனுக்கு எதிராகச் செயல்படும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் குறித்து ‘கன்னட காவல்’ என்ற செல்போன் செயலி மூலம் புகார் அளிக்கலாம்” என்று கூறினார்.