/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/nitish4444.jpg)
பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக எட்டாவது முறையாக நிதிஷ்குமார் பதவியேற்றுக் கொண்டார். ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் துணை முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார்.
பீகார் மாநிலத்தில் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ்குமார், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகளைக் கொண்ட மகா கூட்டணியில் ஐக்கியமானார்.
இதைத் தொடர்ந்து, அக்கூட்டணியில் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிதிஷ்குமார், ஆளுநரைச் சந்தித்து மீண்டும் ஆட்சியமைக்க உரிமைகோரினார். ஒரே நாளில் நிகழ்ந்த மாற்றங்களைத் தொடர்ந்து, பாட்னாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிதிஷ்குமாருக்கு ஆளுநர் பகு சௌகான் முதலமைச்சராகப் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
துணை முதலமைச்சராக ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ், பதவியேற்றுக் கொண்டார். அதே சமயம், ஒட்டுமொத்த அமைச்சரவையையும் மாற்ற வேண்டிய சூழல் முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு உருவாகியுள்ளது.
பா.ஜ.க. உடனான கூட்டணி ஆட்சியின் போது, அக்கட்சியில் 31 சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தனர். சுற்றுச்சூழல், தொழில்துறை, சுகாதாரத்துறை, விவசாயம், சுற்றுலா என முக்கிய துறைகள் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்களுக்கே வழங்கப்பட்டது.
ஆட்சியும், காட்சியும் மாறினாலும் புதிய கூட்டணி ஆட்சியிலும் ஐக்கிய ஜனதா தளத்தை விட ராஷ்டிரிய ஜனதா தளத்திற்கே அதிக அளவிலான சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இதனால் அக்கட்சிக்கு அமைச்சரவையில் அதிக இடம் தர வேண்டிய நிலை முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு ஏற்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)