Skip to main content

இதுதான் பட்ஜெட்டா? மளிகைக் கடைக்காரரின் பில் போல் உள்ளது - சுப்பிரமணியன் சுவாமி  விமர்சனம் 

Published on 02/02/2023 | Edited on 02/02/2023

 

Subramanian Swamy talk about central government's budget

 

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று முன் தினம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கிய நிலையில் நேற்று 2023-2024 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். அதன் பிறகு உரையாற்றிய நிர்மலா சீதாராமன் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு மற்றும் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். 

 

இதனைத் தொடர்ந்து இது வெற்று பட்ஜெட் என்றும், மக்களின் வாழ்வை மேம்படுத்த புதிய திட்டங்கள் எதுவும் இல்லை என்றும் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில், பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டை கடுமையாக விமர்சித்துள்ளார். 

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இன்று(1.2.2023) தாக்கல் செய்தது பட்ஜெட்டா? இது ஒரு மளிகைக் கடைக்காரரின் பில் போல் உள்ளது. ஒரு ஒழுங்கான பட்ஜெட் குறிக்கோள் என்ன என்பதை தெளிவாக வெளிப்படுத்த வேண்டும்.  ஜிடிபியின் வளர்ச்சி விகிதத்தை குறிப்பிட்டால் முதலீட்டின் நிலை என்ன? அதன் வருவாய் விகிதம் என்ன? என்பதைக் கூற வேண்டும். அத்துடன் பொருளாதார வளர்ச்சி, வளங்களைக் கையாளுதல் உள்ளிட்டவற்றிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

சரமாரி கேள்வி எழுப்பிய பங்குச் சந்தை முதலீட்டாளர்; பதிலளிக்க முடியாமல் நழுவிய நிர்மலா சீதாராமன்

Published on 16/05/2024 | Edited on 16/05/2024
A stock market Investor who raised a barrage of questions to nirmala sitharaman

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில், ‘இந்திய நிதிச்சந்தையின் பார்வை’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு, முதலீட்டாளர்களுடன் உரையாற்றினார். 

இதனையடுத்து, இதில் கலந்துக்கொண்ட முதலீட்டாளர்கள் மற்றும் புரோக்கர்கள் உட்பட அனைவரும் நிர்மலா சீதாராமனிடம் கேள்வி எழுப்பி பதில் பெற்று வந்தனர். அதில்  முதலீட்டாளர் ஒருவர் நிர்மலா சீதாராமனிடம், ‘ஜி.எஸ்.டி, ஜி.ஜி.எஸ்.டி, முத்திரை வரி, பத்திர பரிவர்த்தனை வரி (எஸ்.டி.டி)) ஆகிய வரிகளின் மூலம் இந்திய அரசு எங்களை விட அதிகமான லாபத்தை பெறுகிறது. நான் எல்லாவற்றிலும் முதலீடு செய்கிறேன். நான் நிறைய ரிஸ்க் எடுத்து வருகிறேன். என்னுடைய முழு லாபத்தையும் இந்திய அரசாங்கம் எடுத்துக்கொள்கிறது. 

இந்திய அரசு எனது ‘ஸ்லீப்பிங் பார்ட்னர்’ போல மாறி, நான் வருமானம் இல்லாமல் பணிபுரியும் கூட்டாளியாக இருந்து வருகிறேன். இந்த வரிப் பதுக்கல்களுடன் ஒரு புரோக்கர் எவ்வாறு செயல்பட முடியும்? வீடு வாங்குவதில் இருந்த பணக் கூறுகளை அரசு நீக்கியுள்ளது. இப்போதைய காலத்தில் மும்பை போன்ற இடத்தில் வீடு வாங்குவதென்பது கனவாகவே இருக்கிறது. ஏனென்றால், நான் வரி கட்டுவதால், என்னிடம் வெள்ளைப் பணம் இருக்கிறது. இப்போது எல்லாவற்றையும் காசோலையாகக் கொடுக்க வேண்டும். எனவே இந்திய அரசாங்கத்திற்கு வரி செலுத்திய பிறகு மிச்சமாகதான் எனது வங்கி இருப்பில் இருக்கிறது. இப்போது மீண்டும் நான் வீடு வாங்கப் போகும் போது முத்திரை வரி, ஜிஎஸ்டி, 11 சதவீதம் செலுத்த வேண்டும். குறைந்த வளங்களைக் கொண்ட ஒரு நபருக்கு, வீடு வாங்க அரசு எப்படி உதவுகிறது?”எனக் கேள்விகளை முன்வைத்து பேசினார். 

அதற்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “இதற்கு என்னிடம் பதில் இல்லை. ‘ஸ்லீப்பிங் பார்ட்னரால்’ இங்கே உட்கார்ந்து பதில் சொல்ல முடியாது” என்று சிரித்துக்கொண்டே தெரிவித்தார். நிர்மலா சீதாராமனின் இந்தப் பதில் தற்போது விமர்சிக்கப்பட்டு வருகிறது. 

Next Story

“எதிர்க்கட்சி தலைவராக வரக்கூடிய தகுதி மம்தாவுக்குத்தான் உள்ளது” - சுப்பிரமணிய சாமி

Published on 02/05/2024 | Edited on 02/05/2024
Subramanian Swamy said Mamata has the qualifications to become Leader of Opposition

நாடாளுமன்றத் தேர்தலில் நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மட்டும் வெற்றிபெறுவார் என்றும், தமிழக பாஜக தலைமையில் மாற்றம் வரவேண்டும் என்றும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய  சாமி தெரிவித்துள்ளார்.

பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சாமி இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், கடந்த முறை கிடைத்த 300 தொகுதிகளில் இந்த முறை 25 சீட்டுகள் குறைவாகவே கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன். யார் பிரதமர் எனக் கட்சிக்குள் தேர்தல் நடத்தப்படவில்லை. வேட்பாளர்கள் வெற்றிபெற்று வந்த பிறகு பிரதமர் யார் என்பது குறித்து முடிவு செய்ய வேண்டும்.  பிரதமராக மோடிக்கு இரண்டு முறை வாய்ப்புக் கிடைத்து விட்டது. இந்த முறை வேறு ஒருவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து.

பாஜக எம்பிக்கள் என்னைப் பிரதமராக பொறுப்பேற்க சொன்னால் ஏற்பேன். மோடி என்ன சொல்கிறார் என்பதை பார்க்க கூடாது. தேர்தல் அறிக்கையைத்தான் பார்க்க வேண்டும். நாட்டில் சரியான எதிர்க்கட்சித் தலைவர் கிடையாது; எதிர்க் கட்சித் தலைவராக வரக்கூடிய தகுதி மேற்கு வங்க முதல்வர் மம்தாவுக்கு உள்ளது.

தமிழ்நாட்டில் நெல்லை தொகுதியில் போட்டியிடும் நைனா நாகேந்திரன் மட்டுமே வெற்றி பெறலாம். மற்ற வேட்பாளர்களைப் பற்றி தெரியாது. தமிழ்நாட்டில் ஒரு சீட்டுக்கு மேல் கிடைக்குமா என்பதை சொல்ல முடியாது. தமிழ்நாடு பாஜக தலைமையில் மாற்றம் வர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.