நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், 2024 -2025 ஆம் நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று(23.7.2024) தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் விவசாயிகள், ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் ஆகிய நான்கு பிரிவினருக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.
சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் மற்றும் நிதிஷ்குமார் தலைமையிலான ஜனதாளம் ஆகிய கட்சிகளின் உதவியுடனே மத்தியில் பாஜக ஆட்சி அமைந்துள்ளது. இந்த நிலையில் அதற்குப் பிரதிபலனாகவே நேற்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் ஆந்திரா மற்றும் பீகார் மாநிலத்திற்குக் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்த நிலையில், மத்திய பட்ஜெட்டில் பாரபட்சம் இருப்பதாகக் கூறியுள்ள இந்தியா கூட்டணி, பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலத்திற்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளது. இதனைக் கண்டித்து நாடாளுமன்ற வாயிலில் திமுக, விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகளின் எம்.பிக்கள் போராட்டம் நடத்துகின்றனர்.
இதனிடையே பட்ஜெட் தாக்கல் குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை பாஜகவின் மூத்த நிர்வாகி சுப்ரமணியன் சுவாமி கடுமையாகச் சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில், “பட்ஜெட் தாக்கல் செய்ததில் நிதியமைச்சரைக் குற்றம் சொல்வது தவறு. இந்தப் பட்ஜெட் பிரதமர் அலுவலகத்தால் தயாரிக்கப்பட்டது. ஆனால் அந்த முட்டாள்கள் ஒரு அடையாளத்திற்காக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கொடுத்துள்ளனர். அவர் ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்; அவருக்கு ஆடவும், பாடவும் மட்டுமே தெரியும்” எனக் குறிப்பிட்டுள்ளார். பட்ஜெட்டை எதிர்க்கட்சியினர் விமர்சித்து வரும் நிலையில் தற்போது, பாஜக மூத்த தலைவரே விமர்சித்திருப்பதும் பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது.