
நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மைனஸ் ஆறு முதல் ஒன்பது சதவீதம் வரை சரிவதற்கான வாய்ப்பு இருப்பதாக பா.ஜ.க. எம்.பி. சுப்ரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியத் தொழில்துறை பெருமளவு முடங்கியுள்ள நிலையில், நாட்டின் பொருளாதாரமும் முன்னெப்போதும் இல்லாத அளவு சரிவைச் சந்தித்துள்ளது. இந்நிலையில் நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மைனஸ் ஆறு முதல் ஒன்பது சதவீதம் வரை சரிவதற்கான வாய்ப்பு இருப்பதாக பா.ஜ.க. எம்.பி. சுப்ரமணியன் ஸ்வாமி தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரேதச கிளைகள் மற்றும் இந்திய அமெரிக்க வர்த்தக சபை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் காணொளிக்காட்சி மூலம் பேசிய அவர், "கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி சரியும். நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 6 முதல் 9 சதவீதம் வரை இருக்கும் என எதிர்பார்க்கிறேன். பொருளாதாரம் கடந்த 5 ஆண்டுகளாகவே சீர்குலைந்து வருகிறது. இதைச் சுட்டிக்காட்டி பலமுறை பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதிவிட்டேன். தொழிலாளர்கள் அனைவரும் மீண்டும் பணிக்குத் திரும்பிவிட்டால் அடுத்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 7 சதவீதம் வளர்ச்சி அடைய வாய்ப்புள்ளது. ஆனால், இவை நடக்க சரியான பொருளாதாரக் கொள்கைகளைத் திட்டமிட்டுச் செயல்படுத்த வேண்டும். கடந்த 5 ஆண்டுகளாகப் பின்பற்றிய கொள்கைகளைப் பின்பற்றக்கூடாது" எனத் தெரிவித்துள்ளார்.