Advertisment

முடக்கப்பட்ட தமிழக ரயில் வளர்ச்சி திட்டங்கள்; கடிதத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்த உண்மை - சு.வெங்கடேசன் கண்டனம்!

 su venkatesan condemn the freezing of TN railway development projects

Advertisment

தமிழக ரயில் வளர்ச்சி திட்டங்களை முடக்கியதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். முடக்கப்பட்ட திட்டங்களை மீண்டும் நடைமுறைப் படுத்த வேண்டும் என கோருகிறேன் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “தமிழ்நாட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டிய இரயில்வே திட்டங்கள் மீண்டும் சர்வே செய்ய ஏன் மாற்றப்பட்டது?” என்று நான் எழுப்பிய கேள்வியின் உண்மை இப்பொழுது வெளியாகியுள்ளது. தெற்கு இரயில்வேயின் பொது மேலாளர் இரயில்வே வாரியத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட துரோகம் முழுமையாக அம்பலமாகியுள்ளது. தமிழக ரயில் வளர்ச்சித் திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளள. தெற்கு ரயில்வே பொது மேலாளரின் கடிதத்தின் மூலம் உண்மை வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

தமிழக ரயில் வளர்ச்சி திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யும் பிங்க் புத்தகம் சென்ற ஆண்டு நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்த பின் தான் வெளியிட்டார்கள். இந்த ஆண்டு பிங்க் புத்தகத்தையே ஒழித்து விட்டு தொகுக்கப்பட்ட பட்ஜெட் விவரங்கள் என்று நீண்ட நாள் கழித்து வெளியிட்டார்கள். தமிழக ரயில்வே திட்டங்களுக்கு வெறும் ஆயிரம் ரூபாய் தான் ஒதுக்கி உள்ளார்கள் என்பதை நான் விமர்சித்த பின்பும் எவ்வளவு ஒதுக்கீடு என்பதையே மறைத்து வந்தார்கள்? சில திட்டங்களை சர்வே திட்டத்திற்கு ஏன் மாற்றியுள்ளார்கள் என்று நான் கேள்வி எழுப்பியிருந்தேன்.

Advertisment

இப்போது தெற்கு ரயில்வேயின் பொதுமேலாளர் ரயில்வே வாரியத்துக்கு எழுதிய (மே 14 தேதி) கடிதத்தில் முழு உண்மையும் வெளிவந்துவிட்டது. இந்த திட்டங்களை அமல்படுத்தாமல் முடக்கவே இந்த குளறுபடிகளை செய்கிறார்கள் என்று நான் விமர்சித்தது உண்மையென்றாகிவிட்டது. தெற்கு ரயில்வேயின் பொதுமேலாளர் எழுதியுள்ள கடிதத்தில் ரயில்வே வாரியம் 26. 9 .2019 கடிதம் மூலம் தமிழக ரயில் வளர்ச்சி திட்டங்களை முடக்கியதாகவும் (freeze )அந்த திட்டங்களுக்கு இப்போது ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அந்த நிதியை திரும்பவும் சரண்டர் செய்வதாகவும் தெற்கு ரயில்வே கூறி உள்ளது.

திண்டிவனம்- செஞ்சி- திருவண்ணாமலை; அத்திப்பட்டு- புத்தூர் ஆகிய இரு புதிய பாதை திட்டங்களும் ஏற்கனவே முடக்கப்பட்டதாகவும் அதனை விடுவித்தால் தான் (டிஃப்ரீஸ் )பணம் செலவு செய்ய முடியும் என்றும் எனவே இரு திட்டங்களுக்கும் ஒதுக்கப்பட்ட தலா ரூபா 42.70 கோடியை சரண்டர் செய்கிறோம் என்றும் எழுதியுள்ளார். வேறு சில திட்டங்களை முடக்க பட்டியலில் இருந்து விடுவிக்கவும் கோரி உள்ளார்.

ஈரோடு- பழனி புதிய பாதை திட்டம். இந்தத் திட்டம் செயல்படுத்த முடியாதது என்றும் அதனை கைவிட வேண்டும் என்றும் தெற்கு ரயில்வே கடிதம் எழுதியுள்ளது. இதற்காக ஒதுக்கிய 52.135 கோடியை சரண்டர் செய்துள்ளார்கள். மதுரை அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடி புதிய பாதை திட்டத்தையே ஏற்கனவே முடக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது எனவும் அதற்கான ஒதுக்கீடு ரூ 55.1667 கோடியை சரண்டர் செய்வதாகவும் கூறியுள்ளார்கள். ராமேஸ்வரம்- தனுஷ்கோடி புதிய பாதை திட்டத்தை சுற்றுச்சூழல் காரணமாக கைவிட வேண்டும் என்று தமிழக அரசு கோரி உள்ளது. அதனால் அந்தத் திட்டத்தை நிறைவேற்ற முடியாததால் அதற்கான ஒதுக்கீடு ரூபாய் 5.1239 கோடியை சரண்டர் செய்கிறோம் என்றும் கூறியுள்ளார்கள். அதைப்போல மூன்று இரட்டை பாதை திட்டங்களான காட்பாடி -விழுப்புரம்; சேலம்- கரூர்- திண்டுக்கல்; ஈரோடு -கரூர் ஆகியவை இன்னமும் திட்ட தயாரிப்பு கட்டத்தில் தான் உள்ளன எனவே இவற்றுக்கான ஒதுக்கீடு முறையே 200 கோடி 100 கோடி 100 கோடி ஆகியவற்றை செலவு செய்ய முடியாது என்றும் அதனை சரண்டர் செய்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.

இந்த திட்டங்கள் மூன்றும் சர்வேக்கு மாற்றப்பட்டுள்ளது ஏன் என்று நான் கேட்டது இப்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. எனவே தமிழகத்தின் முக்கிய புதிய பாதை மற்றும் இரட்டை பாதை திட்டங்களையும் ஒன்றிய அரசு முடக்கியதை மறைக்கவே பிங்க் புத்தகம் வெளியிடுவதையே தவிர்த்தார்கள். தமிழக ரயில் வளர்ச்சி திட்டங்களை ஒன்றிய அரசு முடக்கியுள்ளதை மறைக்க ரயில்வே அமைச்சகம் தமிழக அரசு நிலம் கையகப்படுத்த வில்லை என்று பொய்யான குற்றச்சாட்டு சொன்னதை நாம் பார்த்தோம். தமிழக ரயில் வளர்ச்சி திட்டங்களை முடக்கியதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். முடக்கப்பட்ட திட்டங்களை மீண்டும் நடைமுறைப் படுத்த வேண்டும் என கோருகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Indian Railway Tamilnadu su venkatesan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe