
நாடு முழுவதும் உள்ள 14 முதல் 16 வயதுக்குட்பட்ட மாணவர்களில் பெரும்பாலோர் கல்வி நோக்கங்களுக்காக அல்லாமல் சமூக ஊடகங்களை பார்க்க தான் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துகிறார்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
29 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 605 மாவட்டங்களில் உள்ள 17,997 கிராமங்களில் வசிக்கும் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களிடம், பிரதம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவன அமைப்பு ஆய்வு ஒன்று நடத்தியது. அந்த ஆய்வில், 14- 16 வயதுக்குட்பட்ட மாணவர்கள் ஸ்மார்ட் போன்களை எதற்காக பயன்படுத்துகின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அதில், நாடு முழுவதும் உள்ள 82.2 சதவீதத்துக்கும் அதிகமாக குழந்தைகள் ஸ்மார்ட்போனை பயன்படுத்த தெரியும். 14-16 வயதுக்குட்பட்ட 57% குழந்தைகள் கல்வி நடவடிக்கைக்காக ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தியதாகவும், அவர்களில் 76% பேர் சமூக ஊடகங்களுக்காக அதைப் பயன்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் 78.8 சதவீதமும், மாணவிகள் 73.4 சதவீதமும் சமூக ஊடகங்களை பயன்படுத்துகிறார்கள் என்று கூறப்படுகிறது.இந்த ஆய்வில், 36.2 சதவீத சிறுவர்களும், 26.9 சதவீத சிறுமிகளும் தங்களுக்கென ஸ்மார்ட்போன் வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
62% பேர் ஒரு சுயவிவரத்தைத் தடுப்பது அல்லது புகாரளிப்பது எப்படி (Report) என்று அறிந்திருந்தாகக் கூறப்பட்டது. 55.2% பேர் ஒரு சுயவிவரத்தை தனிப்பட்டதாக்குவது (private profile) எப்படி என்று அறிந்திருந்தாகவும், 57.7% பேர் கடவுச்சொல்லை (Password) எவ்வாறு மாற்றுவது என்று அறிந்திருந்தாகவும் தெரிவிக்கப்படுகிறது. கேரளாவில் 80% குழந்தைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துகிறார்கள் என்றும், 90% பேர் சமூக ஊடகங்களுக்காக பயன்படுத்துகிறார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
கொரோனா பெருந்தொற்று காலத்தின் போது, ஆன்லைன் வகுப்பிற்காகவும், டிஜிட்டல் பாடங்களுக்காகவும் கிராமப்புற மாணவர்கள் அதிகளவில் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தியதால், கொரோனா தொற்று காலத்திற்கு பிறகு கிராமப்புற மாணவர்கள் அதிகளவில் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துகின்றனர் என்று தெரிவிக்கப்படுகிறது.