students asked to remove their thread and Controversy over college exam in karnataka

Advertisment

மாணவர்கள் அணிந்திருந்த பூணூலை கழற்ற கட்டாயப்படுத்தியதாகக் கூறப்பட்ட சம்பவத்தில் இரண்டு ஊர்க்காவல் படையினர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடகா மாநிலம், ஷராவதிநகரா பகுதியில் ஆதிசுஞ்சனகிரி இண்டிபெண்டனர் பியூ கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் கடந்த 16ஆம் தேதி பொது நுழைவுத் தேர்வு (CET) நடைபெற்றது. இந்த தேர்வை எழுவதற்காக இரண்டாம் ஆண்டு படிக்கும் இரண்டு மாணவர்கள் இந்த கல்லூரிக்கு வந்துள்ளனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த இரண்டு ஊர்க்காவல் படையினர், அவர்களை நுழைவு வாயிலில் தடுத்து நிறுத்தி அவர்கள் அணிந்திருந்த பூணூலை கழற்றுமாறு வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதற்கு அந்த மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து, கல்லூரி ஆசிரியர்கள் உடனடியாக அந்த விஷயத்தில் தலையிட்டு மத அடையாளங்கள் தொடர்பாக மாணவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று காவலர்களுக்கு அறிவுறுத்தினர். இதையடுத்து, இரு மாணவர்களையும் தேர்வு அறைக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டது. இந்த விவகாரம் அப்பகுதியில் சர்ச்சையானது. மேலும், இந்த சம்பவத்திற்கு மாநில அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

Advertisment

இதனை தொடர்ந்து, பூணூல் கழற்ற சொன்ன ஊர்க்காவல் படையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளூர் பிராமண சமூகத்தினர், போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில், ஊர்க்காவல் படையினர் இரண்டு பேரையும் இடைநீக்கம் செய்யப்படுவதாக உத்தரவிடப்பட்டது. மேலும், தேர்வு நடத்தும் அதிகாரி மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது