Strugglers turmoil after the teacher passed away, whose job was taken away in west bengal

Advertisment

மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டில் மாநில அளவிலான ஆசிரியர் பணியிட தேர்வில் நியமிக்கப்பட்ட 25,753 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. ஆசிரியர் பணி நியமனத்தில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்பட்டதில், திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தின. முன்னாள் கல்வி அமைச்சர் மற்றும் மம்தா பானர்ஜியின் நம்பிக்கைக்குரிய துணைத் தலைவர் உட்பட அதன் உயர்மட்டத் தலைவர்கள் பலர் இந்த வழக்கில் சிக்கினர்.

இந்த முறைகேடு தொடர்பாக கொல்கத்தா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 9 முதல் 12ஆம் வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் குரூப் சி, குரூப் டி ஊழியர்கள் என 25,753 நியமனங்களைக் கடந்தாண்டு ஏப்ரல் 22ஆம் தேதி ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், சட்டவிரோதமாக பணியமர்த்தப்பட்டதாகக் கூறி மேற்கண்ட ஆசிரியர்கள், அவர்கள் வாங்கிய சம்பளத் தொகையைத் திருப்பியளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது. இதற்கு எதிராக மேற்கு வங்க அரசு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கொல்கத்தா நீதிமன்றத்தின் உத்தரவு சரியானது தான் என்று கூறி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் சேவைகளை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் ரத்து செய்யப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள், பல ஆண்டுகளாகப் பெற்ற சம்பளத்தை திருப்பித் தர வேண்டியதில்லை என்று தெரிவித்தது. இதனால், பணி நீக்கம் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மேற்கு வங்கத்தின் பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில், பணி நீக்கம் செய்யபப்ட்ட பள்ளி ஆசிரியர் ஒருவர் பக்கவாதத்தால் உயிரிழந்தது போராட்டக்காரர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 25,753 பள்ளி ஆசிரியர்களின் நியமனங்களை ரத்து செய்ததைத் தொடர்ந்து, ஆங்கில ஆசிரியரான 34 வயதான பிரபீர் கர்மாகர் தனது ஆசிரியர் வேலையை இழந்தார். முர்ஷிதாபாத்தில் உள்ள அமுய்பாரா உட்பஸ்து வித்யாபீடத்தில் அரசு ஆசிரியராக வேலை பார்த்து வந்த கர்மாகர், நேற்று முன்தினம் (28-05-25) தனது வீட்டில் பக்கவாதத்தால் காலமானார். சிறுநீரகம் தொடர்பான பிரச்சனையில் போராடி வந்த கர்மாகர், வேலையை இழந்த பிறகு கடுமையான மன உளைச்சலில் இருந்ததாகப் போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர். வேலையை இழந்த ஆசிரியர் ஒருவர், உயிரிழந்துள்ளதால் போராட்டக்காரர்கள் கொந்தளிப்பில் இருக்கின்றனர். மேற்கு வங்க மாநில செயலகத்திற்கு போராட்டம் நடத்தச் சென்றபோது, 50 ஆசிரியர்கள் இரண்டு இடங்களில் தடுத்து வைக்கப்பட்டனர்.