
முகமது நபி குறித்து பாஜகவின் நுபுர் சர்மாவின் சர்ச்சை கருத்து நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சர்ச்சை கருத்து வெளியான உடனே உத்தரப்பிரதேசத்தின் கான்பூர் உள்ளிட்ட பல இடங்களில் கலவரங்கள் வெடித்தது. அதனைத்தொடர்ந்து பூதாகரமான இந்த விவகாரத்தில் குவைத், கத்தார் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்தன. இஸ்லாமிய நாடுகளின் எதிர்ப்புகளுக்கு சர்ச்சைக்குரியகருத்தை வெளியிட்டவரை பாஜக கட்சி நீக்கிவிட்டதாக இந்திய வெளியுறவுத்துறை பதிலளித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து நுபுர் சர்மா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டக்காரர்கள் அமைதி வழியில் திரும்பவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரப்பிரதேச முதல்வர் கடுமையாக எச்சரித்துள்ளார். இந்த போராட்ட நிகழ்வில் கைது, விசாரணை என ஒருபக்கம் போய்க்கொண்டிருக்க, காவலர்களும் தாக்கப்பட்டுள்ளனர். ராஞ்சியில் ஏராளமான காவல் உயர் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் இந்த போராட்டம் நாடு முழுவதும் விரிவடைந்து தீவிரமடையலாம், எனவே ஒவ்வொரு மாநில அரசும் விழிப்புடன் இருக்க வேண்டும் என மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
  
 Follow Us