Skip to main content

இரண்டில் ஒன்று நிகழ்ந்தாலும் கடும் கட்டுப்பாடுகள் - மாநிலங்களுக்கு மத்திய அரசின் அறிவுறுத்தல்!

Published on 22/12/2021 | Edited on 22/12/2021

 

union health secretary

 

உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள ஒமிக்ரான் பாதிப்பு, இந்தியாவிலும் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர் ராஜேஷ் பூஷன், ஒமிக்ரான் தொடர்பாக மாநிலங்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

 

மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர் ராஜேஷ் பூஷன் மாநிலங்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், "கரோனா வைரசின் ஒமிக்ரான் திரிபு டெல்டாவை விட மூன்று மடங்கு அதிகம் பரவும் தன்மை கொண்டது. ஒமிக்ரான் தவிர, டெல்டா மாறுபாடும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவியுள்ளது. எனவே இன்னும் பெரிய தொலைநோக்குப் பார்வையும், தரவு பகுப்பாய்வும், திறமையான முடிவுகளை எடுப்பதும், உள்ளூர் மட்டும் மாவட்ட அளவில் கடுமையான மற்றும் உடனடி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதும் அவசியமாகிறது. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாவட்டங்களில் முடிவுகளை விரைவாகவும் கவனமாகவும் எடுக்க வேண்டும்.

 

கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் தொகை, மருத்துவமனை உள்கட்டமைப்பு மற்றும் நோய்த்தொற்றின் புவியியல் பரவல் போன்ற பல்வேறு அம்சங்களில் மாவட்ட அளவில் வெளிவரும் தரவுகளை மாநிலங்கள் தொடர்ந்து ஆய்வுசெய்ய வேண்டும். ஒரு மாவட்டத்தில் கரோனா உறுதியாகும் சதவீதம் 10%க்கும் அதிகமாக இருந்தாலோ அல்லது 40%க்கும் அதிகமான ஆக்சிஜன் படுக்கைகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் ஒருவாரத்திற்கு ஆக்கிரமிக்கப்பட்டிருந்தாலோ அதிகாரிகள் உடனடியாக கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும். இதன்மூலம் மாநிலத்தின் மற்ற பகுதிகளுக்குத் தொற்று பரவுவதற்கு முன்பு உள்ளூர் மட்டத்திலேயே கரோனா பரவலைக் கட்டுப்படுத்தலாம். உள்ளூர் சூழ்நிலை மற்றும் ஒமிக்ரான் பரவும் விகிதத்தைப் பொறுத்து, இந்த வரம்புகளை எட்டுவதற்கு முன்பே மாநிலங்கள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்கலாம்.

 

கரோனா கிளஸ்டர் கண்டறியப்பட்டால், அனைத்து நோயாளிகளின் மாதிரிகளும் மரபணு வரிசைமுறைக்காக இந்திய கரோனா ஜெனோமிக்ஸ் கூட்டமைப்பு ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட வேண்டும். கரோனா பரிசோதனை மற்றும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட வேண்டும். மருத்துவமனைகளில் படுக்கைகளை அதிகரிக்க வேண்டும். ஆக்சிஜன் இருப்பு, மருந்துகளின் கூடுதல் இருப்பு ஆகியவற்றையும் அதிகரிக்க வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.

 

கட்டுப்பாடுகளைப் பொறுத்தவரை, இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துதல், பெரிய கூட்டங்களை ஒழுங்குபடுத்துதல், திருமணம் மற்றும் இறுதிச் சடங்குகளில் அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துதல், அலுவலகங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்தில் அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகளை எடுக்கலாம் என ராஜேஷ் பூஷன் தனது கடிதத்தில்  கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘ஒருவரிடம் இருந்து 18 பேருக்கு பரவும் தன்மை; அடுத்த 40 நாட்கள் மிக முக்கியமானது’ - சுகாதாரத்துறை தகவல்

Published on 29/12/2022 | Edited on 29/12/2022
'One-to-18 transmission; next 40 days critical' - health department shock

 

உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் லட்சக்கணக்கான உயிர்ப்பலிகளை வாங்கியது. அதன் பிறகு தடுப்பூசி, ஊரடங்கு, தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை மூலம் கட்டுப்பாட்டிற்குள் வந்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் ‘பி.எஃப்.7’ என உருமாறி அதன் புதிய அலையைத் தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

 

இந்தியாவிலும் புது வகை கொரோனா பரவல் தொடர்பான அச்சம் மேலோங்கி வரும் நிலையில், மாநில அரசுகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய அரசு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன் காரணமாக மாநிலங்களில், குறிப்பாக சர்வதேச விமான நிலையங்களில் தீவிரக் கட்டுப்பாடுகள் மற்றும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசுகள் நடைமுறைப்படுத்தி வருகின்றன.

 

இந்த நிலையில், இந்தியாவில் புதுவகை கொரோனா பரவலைத் தடுப்பதில் அடுத்த 40 நாட்கள் மிகவும் முக்கியம் வாய்ந்தது என சுகாதாரத்துறை கருதுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக வரும் ஜனவரி மாதம் மத்தியில் இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று சுகாதாரத்துறை கருதுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கரோனா அலை ஒன்று, இரண்டு ஆகியவற்றின் போக்குகளின் அடிப்படையில் இந்தக் கணிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

 

கடந்த சில நாட்களில் மட்டும் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்த 40 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய வகை கொரோனா மனிதர்களிடையே தொற்றும் விகிதம் அதிகமாக உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முன்பிருந்த கொரோனா தொற்றுகள் ஒருவரிடம் இருந்து சராசரியாக 5 முதல் 6 பேருக்கு பரவும் வேகத்தைக் கொண்டிருந்த நிலையில், தற்போது பரவி வரும் புது வகை ‘பி.எஃப்.7’ கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து 10 முதல் 18 பேருக்கு பரவும் எனவும் எய்ம்ஸ் மருத்துவர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

 

 

Next Story

இந்தியாவில் ஒமைக்ரான் XE  தொற்று உறுதி!

Published on 06/04/2022 | Edited on 06/04/2022

 

 Omicron XE infection confirmed in India!

 

இந்தியாவில் பல மாநிலங்களில் கரோனா கட்டுப்பாடுகள் திரும்பபெறப்பட்டுள்ள நிலையில் அண்மையில் அனைத்து நாடுகளுக்கான விமான சேவையை இந்திய அரசு தொடங்கியிருந்தது. இந்நிலையில் மும்பையில் ஒருவருக்கு ஒமைக்ரான் XE என்ற புதிய வகை கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

 

இதுதொடர்பான தகவலை மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. ஒமைக்ரான் XE என்ற புதிய வகை கரோனா தொற்று 10 மடங்கு வேகமாக பரவும் வைரஸ் என்றும், சீனாவில் இந்த புதிய வகை தொற்று பாதிப்பு இருந்த நிலையில் இந்தியாவில் முதன்முறையாக ஒமைக்ரான் XE உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒமைக்ரான் XE தொற்று முதலில் பிரிட்டன் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டாலும் அதன் பரவல் சீனாவிலேயே அதிகம் இருந்தது. இதனால் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் மகாராஷ்டிராவில் மும்பை நகரில் ஒமைக்ரான் XE  உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.