Advertisment

சிவப்பிலிருந்து பச்சைக்கு மாறிய பங்குச்சந்தைகள்! முதலீட்டாளர்கள் குஷி!

Stock markets changing from red to green

Advertisment

கடந்த இரண்டு செஷன்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை (டிச. 7) மீண்டும், இந்திய பங்குச்சந்தைகள் பச்சை நிறத்திற்கு மாறியதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். புதிய வகை ஒமிக்ரான் வைரஸ் பற்றிய அதீத அச்சுறுத்தல்களால் உலகம் முழுவதும் கடந்த வார இறுதியிலும், நடப்பு வாரத்தின் முதல் நாளான திங்களன்றும் பங்குச்சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்தன.இந்நிலையில், முந்தைய கரோனா வைரஸைக் காட்டிலும் பெரிய அளவில் பாதிப்பை ஒமிக்ரான் வைரஸ் ஏற்படுத்தாது என்ற தகவலால் பங்குச்சந்தைகள் இன்று தடாலடியாக மீண்டெழுந்தன.

இன்று வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 886.51 புள்ளிகள் (1.56%) உயர்ந்து, 57633 புள்ளிகளுடன் வர்த்தகத்தை நிறைவு செய்திருந்தது. அதேபோல, தேசிய பங்குச்சந்தையான நிப்டி 264.45 புள்ளிகள் உயர்ந்து 17176.70 புள்ளிகளில் நிறைவு பெற்றது. இது, முந்தைய நாள் வர்த்தகத்தை விட 1.56 சதவீதம் வளர்ச்சி ஆகும். ஒட்டுமொத்த அளவில் சந்தையில் ஏற்ற, இறக்கம் தென்பட்டாலும் கூட வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பதைக் கணிசமாக குறைத்து விட்டனர். ஆர்பிஐ, உலகளவிலான மத்திய வங்கிகளின் பணக்கொள்கை, வட்டி விகித சீரமைப்பு குறித்த பாசிட்டிவ் தகவல்களும் இன்றைய சந்தை ஏற்றத்துக்கு முக்கிய காரணம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

வங்கிகள், உலோகம், ஆட்டோமொபைல் துறைகள் சார்ந்த பங்குகள் நல்ல ஏற்றம் கண்டுள்ளன.இது ஒருபுறம் இருக்க, புதன்கிழமை வர்த்தகத்தின்போது நிப்டி 17300 புள்ளிகளுக்கு மேல் நிலை கொண்டால், தொடர்ந்து உயர்ந்து 17500 முதல் 17700 புள்ளிகள் வரை எட்டக்கூடும். ஒருவேளை, புதனன்று 17000 புள்ளிகளாக வர்த்தகம் முடிந்தால், மீண்டும் சந்தையில் ஏற்ற இறக்கம் தென்படும் என கணிக்கப்பட்டு உள்ளது. இன்றைய தினம் ஐடி மற்றும் நிதிசார்ந்த துறைகளின் பங்குகள் கூட முதலீட்டாளர்களுக்கு கணிசமான லாபத்தைக் கொடுத்திருக்கின்றன.

Advertisment

ஐரோப்பிய பங்குச்சந்தைகளான டிஏஎக் 30, சிஏசி 40 ஆகியவையும் 1.5 சதவீதம் வரை வளர்ச்சி கண்டிருக்கின்றன. யு.எஸ். சந்தைகளும் ஒமிக்ரான் வைரஸ் அச்சத்தில் இருந்து மீண்டு, லாபத்தில் முடிந்திருக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக புதன்கிழமை (டிச. 8) நடைபெறும் இந்திய ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை குழுக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் இந்திய பங்குச்சந்தைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்கிறார்கள் சந்தை வல்லுநர்கள்.

nse bse sensex nifty
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe