Skip to main content

'பாஜக பொழப்பு சிரிப்பாச் சிரிச்சுப்போச்சு...' – ஸ்டான்ட்-அப் காமெடி பெண்மணியின் சரமாரியான கிண்டல்!

Published on 19/11/2018 | Edited on 19/11/2018

பொழப்பு சிரிப்பாய் சிரிச்சுப்போச்சு என்று சொல்வார்கள் அல்லவா? அதுபோலத்தான் பாஜக அரசு நகரங்களின் பெயர்களை மாற்றும் நடவடிக்கையை புகழ்பெற்ற நகைச்சுவை காட்சிகளை நடத்தும் வாசு பிரைமலானி என்ற பெண்மணி கடுமையாக கிண்டலடித்திருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பாஜக அரசுக்கு பல்வேறு யோசனைகளை கூறியிருக்கிறார்.

 

vasu primalani



“அலகாபாதை பிரயாக் என்றும், ஃபைஸாபாத்தை அயோத்தி என்றும் பெயர் மாற்றிய பாஜகவினர், தற்போது தாஜ்மகாலை ராம் மகால் என்று மாற்ற யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு முன்னதாக ஆக்ராவை அகர்வால் என்று மாற்ற முடிவு செய்திருக்கிறார்கள். ஏனென்றால் ஆக்ராவில் அகர்வால்கள்தான் பெரும்பகுதியாக குடியிருக்கிறார்கள். இத்தகைய சிந்தனை தெய்வீகமானது. அற்புதமானது. தொலைநோக்குப் பார்வையும், புரட்சிகரமான என்னமும் கொண்டது. பாஜகவினர் இத்தகைய சிந்தனையை நிறுத்தாமல் பெயர் மாற்றங்களைத் தொடர வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

பெயர் மாற்றம் மட்டுமின்றி, நமது நடத்தைகளையும் மாற்றிக்கொள்ள வேண்டும். அதற்காக இந்த விஷயத்தில் சில யோசனைகள் வைத்திருக்கிறேன். இந்தியாவில் கடைபிடிக்கப்படும் எல்லாமும் இந்திய கலாச்சாரத்திற்கும் பாரம்பரியத்திற்கும் தொடர்பானவை அல்ல. அவற்றை நாம் கைவிட வேண்டும். தீவாளியில் (Diwali) அலி (Ali) இருக்கிறது. மும்பையில் (Mumbai) பாய் (Bai) இருக்கிறது. மராத்தி வார்த்தையில் பாய் சரிதான். ஆனால், அம்மாவைக் குறிக்கும் மம் (Mum) என்ற ஆங்கில வார்த்தை இருக்கிறதே. அகமதாபாத்தில் அகமது இடம்பெற்று இருக்கிறது. அது நமக்கு ஆகாது. குஜராத் (Gujarat) என்ற வார்த்தையில் ரேட் (Rat)  என்ற ஆங்கில வார்த்தை இருக்கிறது. Rat என்றால் பெருச்சாளி என்றல்லவா அர்த்தம். ஆங்கிலத்தை நாம் எப்படி அனுமதிக்கலாம். இந்தியன் ஏர் ஃபோர்ஸை மூடவேண்டும். புஷ்பக விமானம் என்றுதான் அழைக்க வேண்டும். அதுபோலவே, மிஸைல்ஸ், பாம்ஸ், டேங்க் என்று பல ஆயுதங்களை பயன்படுத்துகிறோம். இவை அனைத்தும் இந்தியாவில் கண்டுபிடித்தது இல்லை. இந்தியாவுக்கு சம்பந்தமும் இல்லாதவை. பிரம்மாஸ்திரா என்பதைக் காட்டிலும் பெரிய ஆயுதம் ஏதேனும் இருக்கிறதா சொல்லுங்கள். எனவே, பிரம்மாஸ்திரத்தை மட்டும் உபயோகப்படுத்துங்கள்.

 

vasu primalani pranab mukherji


கிரிக்கெட்டையும் நாம் விளையாடக்கூடாது. அதற்கு பதிலாக ஒருநாள்,  ஐந்து நாள் யோகா விளையாட்டுகளை மட்டுமே விளையாட வேண்டும். போக்குவரத்துக்கு கார்களையும், ரயில்களையும், ஏரோபிளேன்களையும் பயன்படுத்தக்கூடாது. அவற்றுக்காக தனித்தனியாக சாலைகளையும் போட வேண்டியிருக்கிறது. இவை நமது கலாச்சாரத்திலும் இல்லை. சாலைகளுக்கு அவசியமில்லாத மாட்டு வண்டிகள்தான் நமக்கு உகந்தவை. புஷ்பக் விமானம் நமது கலாச்சாரத்தில் இருப்பதால் அதை மட்டும் பயன்படுத்தலாம். தகவல்களை அனுப்புவதற்கு தொலைபேசிகளையும், மொபைல் போன்களையும் ட்விட்டரையும் பயன்படுத்துவதற்கு பதிலாக புறாக்களை பயன்படுத்த வேண்டும். மைக்ரோபோன்களை பயன்படுத்தி மேடைகளில் சில அரசியல்வாதிகள் பேசுவதாக கூறுகிறார்கள். மைக்ரோபோன்கள் நமது கலாச்சாரத்தில் இல்லை. அவரவர் குரலில் மட்டுமே பேசவேண்டும்.

கோமாதா என்று அழைக்கப்படும் நமது பசு, மாட்டுக் கொட்டகையில் வசிக்கின்றன. நமது அரசியல்வாதிகள் ஏன் நாடாளுமன்றக் கட்டிடத்தை தியாகம் செய்யக் கூடாது. மாட்டுக்கொட்டகையில் ஏன் நாடாளுமன்றக் கூட்டத்தொடரை நடத்தக்கூடாது. பெட்ரோலும் இந்தியாவில் இல்லை. அரபு நாடுகளில் இருந்து வருவதால் அது முஸ்லிம் பெட்ரோல். அந்தப் பெட்ரோலை பயன்படுத்தி விஷ்ணுதேவி கோவில், திருப்பதி, சீரடி போன்ற கோவில்களுக்கு பயணம் செய்ய பாகிஸ்தான் சதி செய்கிறது. கண் கண்ணாடிகளை பயன்படுத்தக்கூடாது. ராமர் யாருக்கு எந்த அளவுக்கு பார்வை கொடுத்திருக்கிறாரோ அந்த பார்வையோடு வாழப் பழக வேண்டும். வெங்காயம், உருளைக்கிழங்கு உள்ளிட்ட வெளிநாட்டு காய்கறிகளை பயன்படுத்தாமல் தவிர்க்க வேண்டும். கோக், பெப்ஸி, டீ, காபி போன்ற எதுவுமே இந்தியாவுக்கு சொந்தமானதில்லை. அவற்றைத் தடை செய்ய வேண்டும். எனவே, ஒரு பகுதி வேலையை மட்டும் செய்யாதீர்கள் என்று உங்களை வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். நகரங்களின் பெயர்களை மட்டும் மாற்றாமல், நமது கலாச்சாரத்துக்கு எதிரான எல்லாவற்றையும் நிராகரிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்” என்று அவர் சரமாரியாக யோசனை கூறியிருக்கிறார்.

 

 

 

சார்ந்த செய்திகள்