
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா கடந்த 7ஆம் தேதி நள்ளிரவு ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவம் எல்லையை மீறி தாக்குதல் நடத்தியது. மே 7ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வந்த தாக்குதல் அனைத்துக்கும் இந்தியா பதிலளித்து வந்தது. இதனையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், அமெரிக்காவின் தலையீட்டு காரணமாக இந்த தாக்குதல்கள் நிறுத்தப்பட்டது.
கர்னல் சோபியா, விங் கமாண்டர் வியோமிகா சிங் மற்றும் பிறருடன் சேர்ந்து, இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் துல்லியத் தாக்குதல்களுக்கு தலைமை தாங்கினார், பாகிஸ்தான் மற்றும் POK இல் ஒன்பது பயங்கரவாத ஏவுதளங்களை அழித்து, 100 க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளைக் கொன்றார். பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல்களுக்கு லெப்டினண்ட் கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்களை விளக்கமளித்திருந்ததன் மூலம் இரண்டு பெண் அதிகாரிகளும் உலகம் முழுவதும் பிரபலம் ஆனார்கள். இவர்களுக்கு பல தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருந்தது.
இந்திய நாட்டுக்காக போராடிய கர்னல் சோபியா குரேஷியை இழிவுப்படுத்தும் விதமாக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பா.ஜ.க அமைச்சர் குன்வார் விஜய் ஷா பேசியது சர்ச்சையாக மாறியது. இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த கர்னல் சோபியா குரேஷியை, பயங்கரவாதிகளின் சகோதரி என சித்திரிக்கும் வகையில் பா.ஜ.க அமைச்சர் குன்வார் விஜய் ஷா பேசியதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. கர்னல் சோபியா குரேஷி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்த விஜய் ஷாவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
மத்தியப் பிரதேச அமைச்சர் விஜய் ஷாவின் கர்னல் சோபியா குரேஷி பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு பெரும் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து, அம்மாநிலத்தை ஆளும் கட்சியான பா.ஜ.க, தனது அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் தலைவர்களுக்கு சிறந்த தகவல் தொடர்பு குறித்து பயிற்சி அளிக்க ஒரு பயிற்சி முகாமை நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக தலைவர்களுக்கான புதிய தகவல் தொடர்பு பயிற்சி திட்டத்தின் கீழ், கட்சியின் கொள்கைகள் குறித்து அவர்களுக்கு விளக்கமளிக்கப்படுவது மட்டுமல்லாமல், சர்ச்சைக்குரிய அறிக்கைகளை வெளியிடுவதையும் சிக்கலில் சிக்குவதையும் தவிர்க்க எப்போது, என்ன, எப்படிப் பேச வேண்டும் என்பதையும் அவர்களுக்குச் சொல்லித் தரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பயிற்சி முகாம் ஜூன் மாதம் போபாலில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிற தலைவர்களுக்கு பொது மன்றங்களில் எவ்வாறு அறிக்கைகளை வழங்குவது, எந்தெந்தப் பிரச்சினைகள் குறித்து அவர்கள் பேச வேண்டும் அல்லது பேசக்கூடாது என்பது குறித்து அறிவுறுத்தப்பட்டு பயிற்சி அளிக்கப்படும். முகாமின் போது, கட்சியின் மூத்த தலைவர்கள், தேசிய செய்தித் தொடர்பாளர்கள் மற்றும் ஊடக மற்றும் தகவல் தொடர்பு நிபுணர்கள், பாஜக தலைவர்களுக்கு வெவ்வேறு அமர்வுகளில் வழிகாட்டுவார்கள்.