Advertisment

சபாநாயகரின் அதிரடி முடிவு; உச்சநீதிமன்றத்தை நாடிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்!

Speaker's Action Decision; Congress MLAs sought the Supreme Court

Advertisment

இமாச்சலப்பிரதேசத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.அம்மாநில முதல்வராக சுக்விந்தர் சிங் ஆட்சி செய்து வருகிறார். இங்கு மொத்தம் உள்ள 68 எம்.எல்.ஏக்களில், காங்கிரஸ் கட்சிக்கு 40 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். பா.ஜ.க.வுக்கு 25 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். மூன்று எம்.எல்.ஏக்கள் எந்தக் கட்சியையும் சேராத சுயேட்சை எம்.எல்.ஏக்களாக இருக்கின்றனர். இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையம் சார்பில் 15 மாநிலங்களில் ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதியுடன் காலியாகவுள்ள 56 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய இணையமைச்சர் எல். முருகன் உள்பட 41 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 15 இடங்களுக்கான தேர்தல் கடந்த மாதம் 27 ஆம் தேதி நடைபெற்றது. இதில் உத்தரப்பிரதேசத்தில் 10, கர்நாடகாவில் 4, இமாச்சலப் பிரதேசத்தில் 1 இடங்களுக்குத் தேர்தல் நடைபெற்றது.

அந்த வகையில் இமாச்சலப்பிரதேசத்தில் காலியாக இருந்த ஒரு இடத்துக்கு ஆளும் காங்கிரஸ் சார்பில் ஒருவரும், எதிர்க்கட்சியான பா.ஜ.க சார்பில் ஒருவரும் என இருவர் போட்டியிட்டனர். ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 40 எம்.எல்.ஏக்கள் இருந்தும், 25 எம்.எல்.ஏக்கள் கொண்ட பா.ஜ.க.வுக்கு 6 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும், 3 சுயேட்சை எம்.எல்.ஏக்களும் வாக்களித்தனர். அதனால், பா.ஜ.க. வேட்பாளர் ஹர்ஷ் மஹாஜன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இது காங்கிரஸ் கட்சித் தலைவர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறி வாக்களித்ததால் அம்மாநில காங்கிரஸ் ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, பா.ஜ.க தலைவர் ஜெய்ராம் தாக்கூர் தலைமையிலான எம்.எல்.ஏக்கள் கடந்த மாதம் 28 ஆம் தேதி காலை அம்மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியதாகக் கூறப்பட்டது. இதனையடுத்து இமாச்சலப்பிரதேச சட்டசபையில், நிதி மசோதா தாக்கல் செய்வதற்காக கடந்த மாதம் 28 ஆம் தேதி சட்டசபை கூடியது.

அப்போது, எதிர்க்கட்சி பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் அவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், அவர்கள் கோஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டதாகவும், சபாநாயகர் அறையில் தவறாக நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. அதனால், பா.ஜ.க எதிர்க்கட்சித் தலைவர் ஜெய்ராம் தாக்கூர் உட்பட 15 பா.ஜ.க எம்.எல்.ஏ.க்களை சட்டப்பேரவை சபாநாயகர் கடந்த 1 ஆம் தேதி சஸ்பெண்ட் செய்வதாக அதிரடி உத்தரவிட்டார். மேலும் கட்சி மாறி பாஜகவுக்கு வாக்களித்த 6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் கீழ் ஹிமாச்சலப்பிரதேசத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 6 பேரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.

congress speaker
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe