அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கோவை மாவட்டம் சூலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “நிறையப் பேர் (அதிமுகவினர்) பல கட்சிக்குப் போனார்கள். அவர்கள் போன வேகத்தில் திரும்பி வருகிறார்கள். இங்கே (அதிமுக) இருக்கிற மரியாதை வேறு எங்கேயும் இருக்காது. பார்ப்பதற்கு அப்படியே சோக்கா இருப்பார்கள். ஒரே நாள் மாப்பிள்ளையை அடக்கிவிடுவார்கள். நிறையப் பேர், புதியதாக ஆரம்பித்த விஜய் கட்சிக்குப் போனவர்கள் திரும்ப வருவதற்கு ரெடியாக இருக்கிறார்கள். பேர் சொல்ல விரும்பவில்லை.
மரியாதையைத் திரும்பக் கொடுத்து அதே பதவி கொடுத்தால் வந்துவிடுனேவ் என்று பேசுகிறார்கள் அப்படிதான் சூழ்நிலை உள்ளது” எனத் தெரிவித்தார். முன்னதாக அதிமுகவின் ஐ.டி. விங் செயலாளராக இருந்த சி.டி. ஆர். நிர்மல் குமார் தவெகவில் இணைந்து அக்கட்சியின் இணைப் பொதுச் செயலாளராகப் பதவி வகித்து வருகிறார். முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவருமான கே.ஏ. செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து விலகிக் கடந்த நவம்பர் மாதம் தவெகவில் இணைந்தார். இவர் தற்போது தவெகவின் உயர்மட்ட நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராகவும், வில்லிவாக்கம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த ஜே. சி. டி. பிரபாகர் கடந்த ஜனவரியில் தவெகவில் இணைந்தார். இவர் தவெகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் இடம் பெற்றுள்ளார். அதிமுகவின் மூத்த தலைவரும், முன்னாள் சபாநாயகர் பி. தனபாலின் மகனான லோகேஷ் தமிழ்செல்வன் சில தினங்களுக்கு முன்பு தவெகவில் இணைந்தார். இவர் 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பலரும் இதே போன்று அதிமுகவில் இருந்து விலகு தகவிற்குச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow Us