Skip to main content

போட்டியின்றி எம்.பியாக தேர்வான சோனியா காந்தி

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
Sonia Gandhi was elected MP unopposed

இந்தியத் தேர்தல் ஆணையம் சார்பில் 15 மாநிலங்களில் ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதியுடன் காலியாகவுள்ள 56 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி ஆந்திரப் பிரதேசம் (3 தொகுதி), பீகார் (6), சத்தீஸ்கர் (1), குஜராத் (4), ஹரியானா (1), ஹிமாச்சல பிரதேசம் (1), கர்நாடகா (4), மத்தியப் பிரதேசம் (5), மகாராஷ்டிரா (6), தெலுங்கானா (3), உத்தரப் பிரதேசம் (10), உத்தரகாண்ட் (1), மேற்கு வங்கம் (5), ஒடிசா (3), ராஜஸ்தான் (3) உள்ளிட்ட இடங்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

இதனையடுத்து, மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் 4 பேரின் பட்டியலை அதிகாரப்பூர்வமாக காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருந்தது. அதில் ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி எம்.பி. பதவிக்கு போட்டியிடுவார் எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தனது வேட்புமனுவை கடந்த 14ஆம் தேதி தாக்கல் செய்தார். 

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு சோனியா காந்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சோனியா காந்தி, போட்டியின்றி தேர்வானதை சட்டமன்ற செயலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கெனவே, 5 முறை மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சோனியா காந்தி முதல் முறையாக மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்