Advertisment

"உண்மைக்கு வெற்றி... சர்வாதிகார ஆட்சியாளர்களின் ஆணவம் தோற்றுவிட்டது" - சோனியா காந்தி அறிக்கை!

sonia gandhi

Advertisment

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என பிரதமர் நரேந்திர மோடி நேற்று(19.11.2021) அறிவித்தார். மேலும், குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் பிற பிரச்சனைகள் குறித்து முடிவெடுக்க மத்திய, மாநில அரசுகளின் பிரதிநிதிகள், விவசாயிகள், விஞ்ஞானிகள், பொருளாதார நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் எனவும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு குறித்து வரவேற்பும், விமர்சனங்களும் எழுந்துள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சர்வாதிகார ஆட்சியாளர்களின் ஆணவம் தோற்றுவிட்டது என தெரிவித்துள்ளார்.

வேளாண் சட்ட வாபஸ் அறிவிப்பு குறித்து சோனியா காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,‘ஏறக்குறைய 12 மாத காந்தியப் போராட்டத்திற்குப் பிறகு, இன்று 62 கோடி விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் போராட்டத்திற்கும் மன உறுதிக்கும் வெற்றி கிடைத்துள்ளது. 700க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்களின்தியாகத்திற்குப் பலன் கிடைத்துள்ளது. இன்று உண்மை, நீதி, அகிம்சைக்கு வெற்றி கிடைத்துள்ளது.

Advertisment

இன்று விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு எதிராக ஆட்சியில் இருப்பவர்கள் தீட்டிய சதி தோல்வியடைந்துள்ளது. எனவே சர்வாதிகார ஆட்சியாளர்களின் ஆணவமும் தோற்றுள்ளது. இன்று வாழ்வாதாரத்தையும் விவசாயத்தையும் தாக்கும் சதி முறியடிக்கப்பட்டுள்ளது. அன்னதாதாக்கள் வெற்றிபெற்றுள்ளனர்.

இந்திய அரசின் கூற்றுப்படி, விவசாயிகளின் சராசரி வருமானம் நாளொன்றுக்கு ₹ 27 ஆக குறைந்துள்ளது. சராசரி கடன் சுமை 74,000 ஆக உள்ளது. விவசாயிகள் தாங்கள் விளைவித்தவற்றுக்கு குறைந்தபட்ச ஆதார விலை மூலம் நியாயமான விலையை எவ்வாறு பெறுவது என்பதை அரசாங்கம் மீண்டும் சிந்திக்க வேண்டும்.

ஜனநாயக நாட்டில் எந்த ஒரு முடிவையும் ஒவ்வொரு பங்குதாரருடனும் பேசி, எதிர்க்கட்சிகளுடன் ஆலோசித்த பின்னரே எடுக்க வேண்டும். இதிலிருந்து எதிர்காலத்திற்காக மோடி அரசு ஏதாவது கற்றுக்கொண்டிருக்கும் என்று நம்புகிறேன்.’ இவ்வாறு சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே காங்கிரஸ் கட்சி, இன்றையநாளை விவசாயிகள் வெற்றி தினமாக கொண்டாட முடிவு செய்துள்ளது.தவறான முடிவுகளுக்கு எதிராக விவசாயிகளின் நிலையான மற்றும் உணர்வுப்பூர்வமான போராட்டத்தை அங்கீகரிக்கும் விதமாக விவசாயிகள் வெற்றி தினம் கடைப்பிடிக்கப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. மேலும் இந்த தினத்தை முன்னிட்டு, விவசாயிகள் வெற்றி பேரணியையோ விவசாயிகள் வெற்றி சபைகளையோநடத்துமாறு மாநில காங்கிரஸ் அமைப்புகளை அறிவுறுத்தியுள்ளது.

farm bill sonia gandhi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe