Sonia Gandhi explained Why she doesnot contest the Lok Sabha elections?

இந்தியத் தேர்தல் ஆணையம் சார்பில் 15 மாநிலங்களில் ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதியுடன் காலியாகவுள்ள 56 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி ஆந்திரப் பிரதேசம் (3 தொகுதி), பீகார் (6), சத்தீஸ்கர் (1), குஜராத் (4), ஹரியானா (1), ஹிமாச்சல பிரதேசம் (1), கர்நாடகா (4), மத்தியப் பிரதேசம் (5), மகாராஷ்டிரா (6), தெலுங்கானா (3), உத்தரப் பிரதேசம் (10), உத்தரகாண்ட் (1), மேற்கு வங்கம் (5), ஒடிசா (3), ராஜஸ்தான் (3) உள்ளிட்ட இடங்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

இதனையடுத்து, மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் 4 பேரின் பட்டியலை அதிகாரப்பூர்வமாக காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருந்தது. அதில் ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி எம்.பி. போட்டியிடுவார் எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தனது வேட்புமனுவை நேற்று (14-02-24) தாக்கல் செய்தார்.

இந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் போட்டியிடாதது ஏன்? என்றும் உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி மக்களுக்கு நன்றி தெரிவித்தும் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதிய அந்தக் கடிதத்தில், ‘உங்களின் நம்பிக்கையை மதிக்கும் விதமாக என்னால் முடிந்த அனைத்து விஷயங்களையும் நான் செய்து வருகிறேன். தற்போது உடல்நிலை மற்றும் வயது மூப்பு காரணமாக வரும் மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை. எனது இந்த முடிவுக்கு பின்னர் என்னால் நேரடியாக உங்களுக்கு சேவை செய்ய முடியாது. ஆனால், எனது எண்ணங்களும், மனதும் எப்போதும் உங்களுடனேயே இருக்கும்.

Advertisment

என் மாமியார் மற்றும் எனது வாழ்க்கைத் துணையை நிரந்தரமாக இழந்து நான் உங்களிடம் வந்தபோது, என்னை நீங்கள் இருகரம் நீட்டி அரவணைத்துக் கொண்டீர்கள். நான் இப்போது என்னவாக இருக்கிறேனோ, அது உங்களால் தான் என்பதை சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கிறேன். அந்த நம்பிக்கைக்கு உண்மையாக வாழ முயற்சிப்பேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.