Skip to main content

பணத்திற்காக அப்பா இறந்ததையே மறைத்த மகன்! - 37 வருட கூத்து!!

Published on 28/02/2018 | Edited on 28/02/2018

தனது அப்பாவின் பென்சன் பணத்திற்காக அவர் இறந்ததையே கடந்த 37 ஆண்டுகளாக அவரது மகன் மறைத்து வந்துள்ளார்.

 

உத்தரக்காண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்தவர் யூ.கே.சர்க்கார். இவரது அப்பா கே.கே.சர்க்கார் வனத்துறையில் பணிபுரிந்து 1955ஆம் ஆண்டு பணிஓய்வு பெற்றார். 1965ஆம் ஆண்டு முதல் கான்வெண்ட் பகுதியில் உள்ள எஸ்.பி.ஐ வங்கிக் கிளையில் பென்சன் கணக்கைத் தொடங்கியுள்ளார். அவர் இறந்தபின்னும், இந்தத் தகவலை வங்கிக்கு தெரியப்படுத்தாமல் பென்சன் பணத்தை வாங்கி வந்துள்ளார் அவரது மகன் யூ.கே.சர்க்கார்.

 

pension

 

சமீபத்தில் வருமான வரித்துறையின் அறிவுரைப்படி, எஸ்.பி.ஐ. வங்கி சார்பில் நூறு வயதுக்கும் மேற்பட்ட பென்சன்தாரர்களை வீடுவீடாக சென்று கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அப்போது, யூ.கே.சர்க்காரின் வீட்டில் இருந்த அவரது மகன் தனது தாத்தா 1981ஆம் ஆண்டே இறந்தவிட்டதாக அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்திருக்கிறார்.

 

உடனடியாக இந்த விவகாரம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், யூ.கே.சர்க்கார் தனது அப்பாவின் பெயரில் வந்த பென்சன் பணத்தை கடந்த 37 ஆண்டுகளாக அனுபவித்து வந்தது தெரியவந்துள்ளது. பென்சன்தாரர்களுக்கான வருடாந்திர ஆய்விற்காக போலி ஆவணங்களையும் யூ.கே.சர்க்கார் தயார் செய்து வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமின்றி, யூ.கே.சர்க்காரின் அம்மா பெயரில் அதே வங்கிகளில் நான்குவிதமான கடன்களை வாங்கி, அதற்கு தன் மனைவியைப் பயன்படுத்தி இருப்பதும் தெரிய வந்துள்ளது. அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்

Next Story

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஓய்வு பெற்றவர்களின் ஓய்வூதிய பலன்களை வழங்கக் கோரிக்கை

Published on 09/10/2023 | Edited on 09/10/2023

 

Request for pension benefits of Annamalai University retirees

 

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை. வளாகத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக சங்கங்களின் கூட்டமைப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு கூட்டமைப்பு தலைவர் மதியழகன் தலைமை தாங்கினார்.

 

இதில் அண்ணாமலைப் பல்கலைக்கழக அயர் பணி பேராசிரியர்கள் நலச்சங்கம், அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணி நிறைவு ஊழியர் சங்கம், பல்கலைக்கழக பணி நிறைவு ஊழிய நலச் சங்கம், கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ஊழிய நலச்சங்கம் உள்ளிட்ட 8 சங்கங்களின் முக்கிய நிர்வாகிகள் 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

 

இந்த கூட்டத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்கட்டமைப்புகளுக்கு ஏற்ப மாணவர் சேர்க்கை இல்லை, எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்து வருவதால் பல்கலைக்கழகத்தில் நிதி சிக்கல் மேலும் அதிகரிக்கும் நிலை உள்ளது,  எனவே மாணவர்கள் சேர்க்கையில் உரிய கவனம் செலுத்தி மாணவர் சேர்க்கை அதிகரிக்க உடனடியாக நடவடிக்கையை பல்கலைக்கழக நிர்வாகம் எடுக்க வேண்டும், ஒவ்வொரு துறைக்கும் ஆராய்ச்சி நிதியை பெறுவதற்கான இலக்கை நிர்ணயத்து நிதி வழங்கும் அமைப்புகளிடமிருந்து நிதியைப் பெற்று ஆராய்ச்சி நிலையை உயர்த்த வேண்டும். கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், பல்கலைக்கழகத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பலன்களை நிதி பற்றாக்குறை காரணமாக நிறுத்தி வைத்துள்ளதை ரத்து செய்து உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்,உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

தீர்மானத்தின் நகலை கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் ஊர்வலமாக சென்று துணைவேந்தரின் செயலாளரிடம் அளித்தனர் வரும் 18-ஆம் தேதிக்குள் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பல்கலைக்கழகத்தில் அனைத்து தரப்பு ஆசிரியர் மற்றும் ஊழியர்களை ஒருங்கிணைத்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என கூட்டமைப்பு தலைவர் மதியழகன் அறிவித்துள்ளார்.

 

 

Next Story

கோயில் பணியாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு

Published on 20/09/2023 | Edited on 20/09/2023

 

Increase in pension for temple workers

 

2023 - 2024 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறையின் சட்டமன்ற அறிவிப்பில்  துறைநிலையிலான ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வுபெறும் கோயில் பணியாளர்களின் நலன் கருதி அவர்களுக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியம் ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.4, ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற்று வந்த பணியாளர் இறந்துவிட்டால் அவரின் வாரிசுதாரருக்கு மாதந்தோறும் ஆயிரத்து 500 ரூபாய் குடும்ப மாத ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டு முதல் குடும்ப ஓய்வூதியம் ஆயிரத்து 500 ரூபாயில் இருந்து ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த அறிவிப்புகளை செயல்படுத்திடும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துறை நிலையிலான ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் கோயில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற திருக்கோயில் பணியாளர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதியத் தொகையான ரூ.4 ஆயிரம் மற்றும் உயர்த்தப்பட்ட குடும்ப ஓய்வூதியத் ஓய்வுபெற்ற தொகையான ரூ.2 ஆயிரம் ஆகியவற்றிற்கான காசோலைகளை கோயில் பணியாளர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு வழங்கினார். இதன்மூலம் ஆண்டொன்றுக்கு 2 ஆயிரத்து 454 ஓய்வூதியதாரர்களும், 304 குடும்ப ஓய்வூதியதாரர்களும் பயன்பெற உள்ளனர்.

 

இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் க.மணிவாசன், இந்து சமய செயலாளர், அறநிலையத்துறை ஆணையாளர் க.வீ.முரளீதரன், கூடுதல் ஆணையர் அ.சங்கர் என பலரும் கலந்து கொண்டனர்.