
ஆன்லைனில் கத்தி வாங்கி திட்டமிட்டு தாயைக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டம் தெள்ளாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் மல்லாரெட்டி (55). இவருக்கு திருமணமாகி ராதிகா (50) என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதியினருக்கு சந்தீப் (28), மற்றும் கார்த்திக் (26) ஆகிய இரண்டு மகன்கள் இருந்தனர். பட்டப்படிப்பு முடித்த கார்த்திக்கு வேலை கிடைக்காததால், மதுபோதைக்கு அடிமையாகியுள்ளார்.
இந்த நிலையில், கடந்த 3ஆம் தேதி அதிகாலை வீட்டில் தனது அறையில் தூங்கிக் கொண்டிருந்த ராதிகாவை, மது போதையில் இருந்த கார்த்திக் சரமாரியாக கத்தியால் குத்தினார். ராதிகாவின் அலறல் சத்தத்தை கேட்டு அங்கு ஓடிவந்த சந்தீப்பையும், அவரது மனைவியையும் கார்த்திக் கத்தியால் குத்த முயன்றுள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த இருவரும், அந்த இடத்தில் இருந்து தப்பித்து பக்கத்து அறைக்குள் சென்று தாழ்ப்பாள் போட்டுக்கொண்டனர். அதன் பின்னர், கார்த்திக் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், கத்தியால் குத்துப்பட்டு படுகாயமடைந்த ராதிகாவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த கார்த்திக்கை கைது செய்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில், ரூ.100 கோடி சொத்துக்கள் உள்ள மல்லாரெட்டியிடமும், ராதிகாவிடமும் தனது சொத்தை பிரித்து தரும்படி மதுபோதையில் இருக்கும் கார்த்திக் தினசரி ரகளையில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும், பெற்றோரை கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டியும் வந்துள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த பெற்றோர், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கார்த்திக்கை பெங்களூருவில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த மாதம் வீடு திரும்பியுள்ளார். இருப்பினும், அவர் மதுபழக்கத்தை கைவிடவில்லை. இந்த சூழ்நிலையில், தனது சொத்தை பிரித்து தர மறுத்த பெற்றோர் மட்டுமல்லாது குடும்பத்தினர் அனைவரையும் கொலை செய்ய கார்த்திக் திட்டமிட்டுள்ளார். அதன்படி, அவர் சில நாட்களுக்கு முன்பு ஆன்லைனில் கத்தியை ஆர்டர் செய்து வாங்கியுள்ளார். அதன் பிறகு, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தாய் ராதிகாவை கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்தது.