ADVERTISEMENT

"நிலைமை ஒன்றியம் vs மாநிலங்கள் என ஆகிவிட்டது" - கேரள முதல்வருக்கு ஜெகன்மோகன் கடிதம்!

10:47 AM Jun 04, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியாவில் கரோனா தடுப்பூசிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசிடமிருந்து வரும் தடுப்பூசிகள் போதாததால், மாநிலங்கள் தடுப்பூசிகளை வாங்க உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி கோரின. ஆனால் தடுப்பூசி நிறுவனங்கள் இந்திய அரசுடன் மட்டுமே தடுப்பூசி வர்த்தகத்தை மேற்கொள்வோம் என கூறிவிட்டன.

இதனால் மாநிலங்கள் வெளியிலிருந்து தடுப்பூசி வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசே தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என மாநிலங்களிடமிருந்து கோரிக்கை வலுத்துவருகிறது. அண்மையில் இதுதொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன், பாஜக ஆளாத 11 மாநில முதல்வர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில் தடுப்பூசியைக் கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்க நாம் அனைவரும் இணைந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என கோரியிருந்தார். பின்னர் இதே கருத்தை வலியுறுத்தி கேரள சட்டப்பேரவையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இந்தநிலையில், ஆந்திர முதல்வர் தடுப்பூசி விவகாரம் தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். தடுப்பூசி விவகாரம் மாநிலம் vs ஒன்றியம் என ஆகிவிட்டதாக கூறியுள்ளார்.

இதுதொடர்பாக ஜெகன்மோகன் ரெட்டி தனது கடிதத்தில், "கரோனா வைரஸுக்கு எதிரான நமது கூர்மையான ஆயுதம் தடுப்பூசி. அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடுவதற்கான எங்கள் உறுதிப்பாட்டுக்கு ஏற்ப, தடுப்பூசிகளை நேரடியாக வாங்க உலகளாவிய டெண்டர் கோரியிருந்தோம். ஆனால் ஏமாற்றமளிக்கும் வகையில் யாரும் டெண்டர் கோரவில்லை. ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் இந்திய அரசிடம் உள்ளது என்பதால் நிலைமை ஒன்றியம் Vs மாநிலங்களாக மாறியுள்ளது" என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “முதல்வர்களாகிய நாம் அனைவரும் ஒரே குரலில் பேசி, தடுப்பூசி இயக்கத்தின் பொறுப்பை எடுத்துக்கொள்ளும்படி மத்திய அரசை வலியுறுத்துவோம் என்பது எனது கோரிக்கையாகும்" என கூறியுள்ளார். தடுப்பூசி விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே கேரள முதல்வர், பிற மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில், தற்போது ஆந்திர முதல்வரும் கடிதம் எழுதியிருப்பது முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT