Skip to main content

"சாத்தான்குளம் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கொலைக் குற்றத்திற்கான வழக்குப் பதியவேண்டும்" - சீதாராம் யெச்சூரி...

Published on 27/06/2020 | Edited on 27/06/2020

 

sitaram yechuri about sathanulam issue

 

சாத்தான்குளம் சம்பவத்தில் தொடர்புடைய காவலர்கள் மீது இந்தியத் தண்டனை சட்டத்தின் 302 ஆவது பிரிவின் கீழ் வழக்குப் பதியவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். 

 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காமராஜ் சிலைக்கு வடபுறத்தில் செல்போன் கடை நடத்தி வந்த பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கடந்த 20- ஆம் தேதி இரவில் ஊரடங்கு விதிகளை மீறி கடையைத் திறந்து வைத்துள்ளதாகக் கூறி சாத்தான்குளம் காவல் நிலைய போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்டனர்.  காவல் நிலையத்தில் நடந்த விசாரணையில், போலீஸார் கூட்டாகச் சேர்ந்து தந்தை மகன் இருவரையும் அடித்தாகக் கூறப்படும் நிலையில், அவர்கள் இருவரும் போலீஸாரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் கைது செய்யப்பட்டு, கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இருவரும் சில தினங்களுக்கு முன்பு மரணமடைந்தனர். அவர்களின் மரணத்திற்கு, அவர்களிடம் முரட்டுத்தனமாக நடந்துகொண்ட காவலர்களே காரணம் என்று நாடு முழுவதும் எதிர்ப்பு அலை எழுந்துள்ளது.

 

இந்நிலையில் இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, "தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தையும் மகனும் போலீஸார் காவலில் கொல்லப்பட்ட அதிர்ச்சி நிகழ்வுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நான் கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் இருவரும் கொடூரமான முறையில் அடித்துத் துன்புறுத்தப்பட்டதன் விளைவாகவே இறந்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் 302-ஆவது பிரிவின்கீழ் கொலைக் குற்றத்திற்காக வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும்.

 

கொல்லப்பட்டவர்கள் படுகாயமடைந்து இருந்தபோதிலும், அவர்களை ரிமாண்ட் செய்த நீதித்துறை நடுவரின் நடவடிக்கை, அருகிலேயே சிறை இருந்தும், அங்கே அடைக்காமல் வெகுதூரத்தில் உள்ள சிறைச்சாலையில் அடைக்கப்பட்டது. மருத்துவர்கள் அவர்களைச் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்புவதற்குப் பதிலாக, சிறைக்கு அனுப்பியது மற்றும் சிறை அதிகாரிகள் அவர்களின் காயங்களைக் குறித்துக் கொள்ளாமல் அவர்களைச் சிறைக்குள் அனுமதித்திருப்பது முதலானவை குறித்து ஓர் உயர்மட்ட அளவிலான விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது ஜனநாயகத்துக்கு பொருந்தாத ஒன்று” - சீதாராம் யெச்சூரி

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
Sitaram Yechury said One country, one election is unfit for democracy

'ஒரே நாடு; ஒரே தேர்தல்' தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தர முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 2 ஆம் தேதி சிறப்புக் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்திருந்தது. இந்தக் குழு மக்களவை மற்றும் சட்டசபைத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து ஆய்வு செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தக் குழுவில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை குழுத் தலைவர் ஆதிரஞ்சன் சவுத்ரி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத், திட்டக்குழுவின் முன்னாள் தலைவர் என்.கே. சிங், மக்களவையின் முன்னாள் செயலாளர் சுபாஷ் காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.

அதே சமயம் ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவது குறித்து விரைவாக அறிக்கை அளிக்க இக்குழுவிற்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது. இந்தச் சூழலில் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி (23.09.2023) ராம்நாத் கோவிந்த் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் குறித்த பூர்வாங்க நடவடிக்கை மேற்கொள்வது பற்றியும், இந்தத் திட்டம் செயல்படுத்துவது குறித்தும் இந்த குழு தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது. 

அந்த வகையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்துவது தொடர்பாகப் பொதுமக்களிடம் கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற முறையில் தேர்தல் நடத்துவது குறித்து ஜனவரி 15 ஆம் தேதிக்குள் பொதுமக்கள் கருத்து கூறலாம் எனக் கடந்த 5 ஆம் தேதி தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், டெல்லியில் இன்று (06-02-24) ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் தொடர்பாக கருத்து கேட்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கலந்து கொண்டார். இந்த கூட்டத்துக்குப் பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். 

அப்போது அவர், “ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டக்குழுவின் பரிந்துரைகள் முற்றிலும் தவறாக இருக்கிறது. இத்திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த முடியும் என்று அக்குழு நினைக்கிறது. அவர்கள் கருதுவது முற்றிலும் நடைமுறைக்கு சாத்தியமற்றது என்பதே எங்கள் கருத்து. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது. ஜனநாயகத்துக்கும், கூட்டாட்சி தன்மைக்கும் பொருந்தாதது. ஒரு அரசு பேரவையில் உறுப்பினர்களால் பெரும்பான்மையை இழந்த பிறகும் ஆட்சியில் தொடர்வது முற்றிலும் ஜனநாயகத்தன்மையற்றது” என்று கூறினார். 

Next Story

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு; இன்ஸ்பெக்டர் ஜாமீன் மனு தள்ளுபடி

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
Satankulam father, son case; Inspector dismisses bail plea

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் நேரம் கடந்து கடையைத் திறந்து வைத்ததாக விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் காவல் நிலையத்தில், காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கினை சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமைக் காவலர்கள் முருகன், சாமிதுரை, காவலர்கள் முத்துராஜா, செல்லத்துரை மற்றும் தாமஸ் பிரான்சிஸ் உள்ளிட்ட 9 பேரை சிபிஐ போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட முதன்மை அமர்வு முதலாவது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை, மகன் தாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமின் கோரி 5 வது முறையாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ தரப்பு வழக்கறிஞர், “சாட்சிகளில் ஒருவரான மாஜிஸ்திரேட் பாரதிதாசனிடம் 28 நாட்கள் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டுள்ளதால், வழக்கின் விசாரணை தாமதமாகிறது” என வாதிட்டார். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “மாஜிஸ்திரேட் பாரதிதாசனிடம் 28 நாட்கள் குறுக்கு விசாரணை நடத்தினால், அவர் தன்னுடைய பணிகளை செய்வாரா அல்லது தினசரி நீதிமன்றம் வந்து சாட்சியம் அளிப்பாரா?” என சரமாரியாக கேள்வி எழுப்பினார். இதனையடுத்து காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமின் மனுவை 5 வது முறையாக தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமீன் மனு 4 முறை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.