வட கிழக்கு மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் மகாராஷ்டிரா, பீகார், அசாம், இமாச்சல் பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கனமழை மற்றும் நிலச்சரிவால் சுமார் 100- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50 லட்சம் மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். ஒரு கோடி மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சிக்கிம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் ரேஷிகோலா அருகே நயபஜார்-லெக்ஷிப் சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில், டிராக்டர் மீது ஒரு பெரிய பாறாங்கல் விழுந்தது. இதில் டிராக்டர் ஓட்டுநர் அதிஷ்டவசமாக உயிர்தப்பினார். நிலச்சரிவு ஏற்பட்டதை அடுத்து, அந்த சாலை வழியாக வாகனங்கள் பயணம் செய்வதை தடுக்கும் வகையில், சாலை உடனடியாக தடைச்செய்யப்பட்டது. டிராக்டர் மீது பாறாங்கல் விழும் அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி. தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.