Advertisment

"கரோனா உபகரணங்கள் வாங்கியதில் ரூ.2 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது" - பா.ஜ.க. மீது சித்தராமையா குற்றச்சாட்டு...

sidharamaiyah about karnataka corona equipment purchase

Advertisment

கர்நாடக மாநிலத்தில் கரோனா உபகரணங்கள் வாங்கியதில் ரூ.2 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளதாக முன்னாள் முதல்வர் சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தியாவில் கரோனாவின் தாக்கம் உச்சத்திலிருந்து வரும் சூழலில், கடந்த சில நாட்களாகத் தினமும் 40 ஆயிரம் பேருக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அந்தவகையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் கரோனாவால் புதிதாகப் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 49,310 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் கரோனா உபகரணங்கள் வாங்கியதில் ரூ.2 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளதாக முன்னாள் முதல்வர் சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்து பேசிய சித்தராமையா, "கர்நாடகாவில் கரோனா சிகிச்சைக்கான மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் ஊழல் நடந்திருப்பதாகக் கடந்த 3-ஆம் தேதி நான் கூறினேன். இது தொடர்பான விவரங்களை அளிக்கும்படி 20-க்கும் மேற்பட்ட முறை தலைமைச் செயலர், சுகாதாரத்துறை அதிகாரிகளுக்குக் கடிதம் எழுதினேன். ஆனால் யாரும் என் கடிதத்திற்குப் பதில் அளிக்கவில்லை. அப்படி இருக்கும் போது, 17 நாட்கள் கழித்துச் சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமலு, நான் கூறியது பொய் எனக் கூறுகிறார். கர்நாடகாவில் கரோனா சிகிச்சை உபகரணங்கள் வாங்குவதற்காக எடியூரப்பா அரசு இதுவரை ரூ.4,167 கோடி செலவு செய்துள்ளது. இதில் ரூ.2 ஆயிரம் கோடி ஊழல் நடந்திருக்கிறது. தற்போது சந்தையில் உள்ள விலையைக் காட்டிலும் அனைத்து பொருட்களும் கூடுதல் விலை கொடுத்து அனைத்து உபகரணங்களும் வாங்கப்பட்டுள்ளன.

Advertisment

தமிழ்நாடு அரசு ஒரு வென்டிலேட்டரை ரூ.4 லட்சத்துக்கு வாங்கியுள்ளது. ஆனால் கர்நாடக அரசு ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.21 லட்சம் வரைக்கும் வென்டிலேட்டர்களை வாங்கியுள்ளது. தரமான தெர்மல் ஸ்கேனர் தற்போது சந்தையில் ரூ.2 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது. ஆனால் கர்நாடக அரசு அதனை ரூ.5 ஆயிரத்துக்கு மேல் விலை கொடுத்து வாங்கியுள்ளது. சந்தையில் ரூ. 330-க்கு விற்கப்படும் கரோனா பாதுகாப்புக் கவச உடைகளை, ரூ.2 ஆயிரத்து 112 கொடுத்து வாங்கியுள்ளனர். மக்கள் உயிருக்குப் போராடும் சூழலிலும் கரோனா உபகரணங்கள் வாங்கியதில் ரூ.2 ஆயிரம் கோடிக்கு ஊழல் செய்திருக்கும் பா.ஜ.க.வின் இந்தச் செயல் மனிதத் தன்மையற்றது. இதற்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். இந்த முறைகேடு குறித்து உடனடியாக உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

karnataka corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe