Skip to main content

"இளைஞர்களை வேலையில்லா திண்டாட்டத்தில் தள்ளும் அக்னிபத்" - சித்தராமையா விமர்சனம்

Published on 17/06/2022 | Edited on 17/06/2022

 

siddaramaiah slams agnipath scheme

 

இந்திய இராணுவத்தில் நான்கு ஆண்டுகள் மட்டும் பணிபுரியும் வகையில் புதிய ஆள்சேர்க்கும் முறையான ‘அக்னிபத்’ திட்டத்திற்கு ஒன்றிய அரசு சமீபத்தில் அனுமதி அளித்தது. இந்த அறிவிப்பு வெளியான நாள் முதல் தொடர்ந்து பீகார், உத்தரப்பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பெரும் போராட்டம் வெடித்துள்ளது. 

 

இந்நிலையில், மத்திய அரசின் இந்த புதிய திட்டம் பற்றி கருத்து தெரிவித்துள்ள கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா, "ராணுவ வீரர்களை நியமிக்கும் புதிய அக்னிபத் திட்டம் இளைஞர்களை வேலையில்லா திண்டாட்டத்தில் தள்ளும் மற்றும் நாட்டின் பாதுகாப்பில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். பாஜக இந்த புதிய திட்டத்தைக் கைவிட்டு, தற்போதுள்ள நடைமுறையின்படி ராணுவ வீரர்களை நியமிக்க வேண்டும்.

 

2 கோடி வேலை வாய்ப்பு தருவதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடி, தற்போது இளைஞர்களுக்குக் கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் மூடிமறைத்து வருகிறார். மோடி, ஆண்டுக்கு 2 கோடி வேலையில்லாத இளைஞர்களை உருவாக்குவதற்கான செயல்திட்டம் ஏதும் உங்களிடம் உள்ளதா? அக்னிபத் திட்டத்தில் சேரும் ராணுவ வீரர்களுக்கு தங்களின் வேலை வாய்ப்புகள் குறித்த பாதுகாப்பற்ற தன்மையும், எதிர்காலம் குறித்து நம்பகத்தன்மை இல்லாமையும் இருந்தால் முழுமையாக பணியில் ஈடுபட முடியுமா? படையினர் இந்த பாதுகாப்பின்மையை வளர்த்துக் கொண்டால் இது ஆபத்தானது அல்லவா?

 

நமது அர்ப்பணிப்புள்ள ராணுவ வீரர்களுக்குச் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்கி, வேலைப் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாத அளவுக்கு பாஜக அரசாங்கம் திவாலாகிவிட்டதா? மோடி அரசின் திவால் நிலையை மறைக்க நமது பாதுகாப்போடு விளையாடக் கூடாது. விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை அமல்படுத்த முயன்ற பாஜக அரசுக்கு நம் நாட்டு மக்கள் பாடம் புகட்டியுள்ளனர். நமது இளைஞர்கள் மற்றும் நமது வீரர்களின் எதிர்காலத்துடன் விளையாடுவதற்கு மக்கள் மீண்டும் பாடம் புகட்ட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

 

அதேபோல, இவ்விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள கர்நாடக காங்கிரஸ் முன்னாள் தலைவர் தினேஷ் குண்டுராவ், "ராணுவத்திற்குக் கடந்த 2 ஆண்டுகளாக ஆட்களைச் சேர்க்கவில்லை. இப்போது அக்னிபத் என்ற பெயரில் 4 ஆண்டுகளுக்கு மட்டும் ராணுவ வீரர்களைச் சேர்ப்பதாக அரசு அறிவித்துள்ளது. 4 ஆண்டுகளில் ஓய்வு பெற்ற பிறகு அவர்களின் எதிர்காலம் என்ன?. ராணுவத்தில் சேருகிறவர்களில் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தான் அதிகம். வசதி படைத்தவர்கள் மற்றும் தேசபக்தி குறித்து மேடைகளில் முழங்கும் தலைவர்களின் பிள்ளைகள் ராணுவத்தில் சேருவது இல்லை. 

 

ராணுவத்தில் சேரும் இந்த இளைஞர்களுக்குப் பணி பாதுகாப்பு தேவைப்படுகிறது. இதை மத்திய அரசு அறிந்துகொள்ள வேண்டும். ஓய்வு பெற்ற பிறகு ராணுவ வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதிலிருந்து தப்பித்துக் கொள்ளும் நோக்கத்தில் இந்த அக்னிபத் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. நாட்டை காக்கும் ராணுவ வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்க முடியாத அளவுக்கு நமது நாடு மோசமான நிலையில் உள்ளதா?. ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாகப் பிரதமர் மோடி கூறினார். அதை அவர் செய்யவில்லை. இப்போது அக்னிபத் என்ற பெயரில் நாடகமாடுகிறார்" என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆபரேஷன் தாமரை?; பா.ஜ.க. மீது சித்தராமையா பரபரப்பு குற்றச்சாட்டு

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
BJP Siddaramaiah accused of BJP for operation lotus

மக்களவைத் தேர்தல், நாடு முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கவிருக்கிறது என தேர்தல் ஆணையம் அறிவித்தது. நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்தத் தேர்தல் நாடு முழுவதும் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று அதில் பதியப்படும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையில், மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடக மாநிலத்தில், ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடவுள்ளது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. அந்த வகையில், பா.ஜ.க - ஜனதா தளம் (எஸ்) கூட்டணி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில், கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க ‘ஆபரேஷன் தாமரை’ என்ற பெயரில் பா.ஜ.க சதி திட்டம் நடத்தி வருவதாக அம்மாநில காங்கிரஸ் தரப்பினர் அவ்வப்போது குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர். அதே வேளையில். மக்களவைத் தேர்தலுக்கு பிறகு, முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழும் என்று பா.ஜ.க.வினர் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், கர்நாடகா முதல்வர் சித்தராமையா, தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அதில் பேசிய முதல்வர் சித்தராமையா, “கடந்த ஒரு வருடமாக எனது தலைமையிலான அரசை கவிழ்க்க பா.ஜ.க.வினர் முயற்சி செய்து வருகின்றனர். எங்கள் எம்.எல்.ஏக்களுக்கு ரூ.50 கோடி வரை வழங்க தயாராக இருந்தார்கள். ஆனால், அவர்களால் அதை செய்ய  முடியவில்லை. எங்கள் எம்.எல்.ஏக்கள் என்றைக்குமே விட்டு செல்லமாட்டார்கள். ஒரு எம்.எல்.ஏ கூட எங்கள் கட்சியை விட்டு செல்லம்மாட்டார்கள். எனது ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் அவர்கள் தோல்வி அடைந்துவிட்டனர்” என்று கூறினார். 

Next Story

“இனி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை” - சித்தராமையா அதிரடி அறிவிப்பு!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Siddaramaiah's action announcement that Not going to contest elections

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

அந்த வகையில், மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில், ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடவுள்ளது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்த தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது. 

இந்த தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து, கர்நாடகா முதல்வர் சித்தராமையா தீவிர பிரச்சாரத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், இனி வருகின்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அதிரடி அறிவிப்பை முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். 

கர்நாடகா மாநிலம், மைசூருவில் நேற்று (03-04-24) வேட்பாளரை ஆதரித்து முதல்வர் சித்தராமையா தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “வருணா தொகுதி மக்கள், மீண்டும் அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று விரும்புகின்றனர். ஆனால் இனி வருகின்ற தேர்தலில் போட்டியிடுவதில்லை என நான் முடிவு செய்துள்ளேன். எனக்கு இப்போது 77 வயது. எனக்கு இன்னும் 4 ஆண்டுகள் தான் பதவிக்காலம் இருக்கிறது. அப்போது எனக்கு 81- 82 வயது ஆகியிருக்கும். 82 வயதில் என்னுடைய உடல் நலம் சரியாக இருக்காது. அப்போது, என்னால் மகிழ்ச்சியாக வேலை செய்ய முடியாது.

2028ஆம் ஆண்டில் கர்நாடகாவில் அடுத்த சட்டமன்றத் தேர்தல் வரும் போது எனக்கு 82 வயதாகி, நான் அரசியலுக்கு வந்து 50 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பேன். அப்போது, நான் தேர்தல் அரசியலில் இருந்து விலகி விடுவேன்” என்று தெரிவித்தார்.